விஷ்ணுவை விட்டு கணப்பொழுதும் பிரியாதவள் மகாலட்சுமி. வாமன அவதாரத்தில் விஷ்ணு பிரம்மச்சாரியாக இருந்த போதிலும், அவரை விட்டு விலக அவளுக்கு மனம் வரவில்லை. ஸ்ரீவத்சம் எனப்படும் அவரது திருமார்பில் எப்போதும் மகாலட்சுமி வீற்றிருப்பாள். லட்சுமி மார்பில் இருக்க, மகாபலியிடம் யாசகம் கேட்க எப்படி செல்வது என்று தயக்கம் வாமனருக்கு உண்டானது. கிருஷ்ணார்ஜுனம் என்னும் கருப்பு நிறப் போர்வையை போர்த்தி மார்பை மறைத்துக் கொண்டார். இதன்பின் லட்சுமியின் பார்வை மகாபலிக்கு கிடைக்க வாய்ப்பில்லாமல் போனது. இதன் பின்னரே வாமனர் நர்மதை நதிக்கரையில் மகாபலி நடத்திய யாகத்திற்கு புறப்பட்டார். மழை தரும் தீர்த்த பாதாவாமன மூர்த்தியின் வரலாற்றைப் படித்தால் மழை பெய்யும். ஏனெனில் வாமனருக்கு தீர்த்த பாதா என்னும் சிறப்புப் பெயருண்டு. புனிதமான தீர்த்தத்தை பாதத்தில் உடையவர் என்பது இதன் பொருள். வாமனர் திரிவிக்ரம அவதாரம் எடுத்து பாதத்தை விண்ணுலகம் வரை துாக்கிய போது, அது சத்தியலோகத்தை அடைந்தது. அதை தரிசித்த பிரம்மா புனித நீரால் அபிஷேகம் செய்து ஆராதித்தார்.