பதிவு செய்த நாள்
22
ஆக
2021
12:08
உசிலம்பட்டி: உசிலம்பட்டி புத்தூர் மலைப்பகுதியில் பழங்கால மனிதர்கள் வரைந்த பாறை ஓவியங்கள் போல அருகிலுள்ள வகுரணி மொட்டமலையில் புலிப்பொடவு குகையில் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உசிலம்பட்டி பகுதியில் பழங்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்களாக அருகில் உள்ள மலைகளில் சமணர் சிற்பங்கள், பாறை ஓவியங்கள், உலைப்பட்டி பகுதியில் இரும்பு உருக்கு ஆலை, முதுமக்கள் தாழி, பாறைப்பட்டி அருகே பழங்கால மனிதர்கள் பாறைகளில் ஏற்படுத்தியுள்ள கப் மார்க் உள்ளிட்டவை காணப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக வகுரணி, அயோத்திபட்டி, பெருமாள் கோவில்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு இடையில் வரும் மூன்று மலைகள் அமைந்துள்ள பகுதியில் வகுரணி அருகே உள்ள மொட்டமலை புலிப்பொடவு என்ற இயற்கையாக அமைந்த பாறை குகை பகுதியில் பழங்கால மனிதர்கள் வரைந்த ஓவியங்கள் தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த குகை அமைந்துள்ள மலை சிவன் சுயம்புவாக தோன்றிய மலை என தெரிவிக்கும் சிவபக்தர்கள் இங்கே அடிக்கடி வந்து தங்கி வழிபாடு மேற்கொள்கின்றனர்.
காந்திராஜன் கூறியதாவது: பழங்காலத்தில் மதுரைக்கு மேற்கே செல்வதற்கான பாதை அமைந்துள்ள இந்த பகுதியில் அடிவாரத்தில் இருந்து சுமார் 50 அடிக்கும் குறைவான இப்பகுதியில் இருந்து பார்க்கும்போது திருப்பரங்குன்றம், திடியன், புத்தூர் வாசிமலை ஆகிய மலைகள் ஒரே நேர்கோட்டில் காட்சி தருகிறது. இந்த வழியாக வருபவர்களை இங்கிருந்து கண்காணிக்கக் கூடிய வகையில் இந்த நிலப்பரப்பு அமைந்துள்ளது. புத்தூர் மலைப்பகுதியில் உள்ள வெள்ளை நிற பாறை ஓவியங்களைப் போன்று இங்குள்ள ஓவியங்கள் இருக்கின்றன. கூடுதலாக வட்டம், சதுரம், செவ்வகம், புள்ளிகளை வைத்து மனித உருவம் போன்ற அமைப்புடன் உள்ள ஓவியங்களை ஏதோ ஒரு செய்தியை குறிப்பிடும் நோக்கத்தில் வரைந்துள்ளனர். அதிகம் ஆண்கள் மட்டுமே காணப்படும் ஓவியங்களுக்கு இடையே, பெண் தோற்றத்தை சித்தரிக்கும் ஓவியமும் காணப்படுகிறது. வெள்ளை நிற வண்ணத்தில் காணப்படும் ஓவியங்களுக்கிடையே சிகப்பு நிற வர்ணத்தில் புலி பாய்வதற்கு தயாராக உள்ளதை காட்சிப்படுத்தும் கோட்டு ஓவியமும் உள்ளது. மேலும் இந்த மலையில் உள்ள குகைகளில் பாறை ஓவியங்கள் இருப்பதாக இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். இது போன்ற பழங்கால மனிதர்களின் வாழ்விடத்தையும், அவர்கள் விட்டுச் சென்ற தடயங்களையும் அரசாங்கமும் மாவட்ட நிர்வாகமும் பாதுகாப்பு பகுதியாக அறிவித்து பராமரிப்பு செய்ய வேண்டும் என்றார்.