நாம் நினைத்தபடி எல்லாம் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அதற்கு மாறாக நடந்தால் கோபம் வருகிறது. . இப்படி செய்வது தவறு. நடப்பதை ஏற்றுக்கொள்வதே மகிழ்ச்சிக்கான வழியாகும். ஹுதைபியா எனும் இடத்தில் நாயகத்திற்கும், குறைஷிகளுக்கும் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இது முஸ்லிம்களுக்கு எதிராக இருந்தது. இதற்கு தோழர்களில் ஒருவரான உமர் கோபப்பட்டார். ‘‘இது என்ன கோழைத்தனமான ஒப்பந்தம். அவர்கள் நமக்கு எதிரி ஆயிற்றே’’ என நாயகத்திடம் கேட்டார். ‘‘ஆம். எதிரிகள்தான். இருந்தாலும் ஒப்பந்தத்தை மீற மாட்டேன்’’ என்றார் நாயகம். இந்நிலையில் இறைவன் ஒரு வசனத்தை அருளினான். ‘நான் உமக்கு வெற்றியளிப்பேன்’ என்றான். இந்த உடன்படிக்கைக்கு பிறகு மக்கா நகரை வெற்றி கொண்டார் நாயகம். தாம் அவசரப்பட்டது மிகப்பெரிய தவறு என்பதை உணர்ந்தார் உமர். நாம் நினைப்பதெல்லாம் நடக்க வேண்டும் என்று எண்ணாமல், நல்லது நடக்கட்டும் என்று எண்ணுங்கள். இதன் மூலம் ஏமாற்றம் இல்லாத வாழ்க்கையை வாழலாம்.