பதிவு செய்த நாள்
23
ஆக
2021
12:08
பல்லடம்: பல்லடம் அருகே, சித்தி விநாயகர் மற்றும் பெருமாள் கோவில் கால்கோள் விழா நடந்தது. பல்லடம் வட்டாரம், சுக்கம்பாளையம் கிராமத்தில், நூற்றாண்டுகள் பழமையான சித்தி விநாயகர் மற்றும் ஸ்ரீஹரி வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. சுற்று வட்டார கிராம மக்கள் வழிபட்டு வரும் இக்கோவில் திருப்பணி மேற்கொள்ள பக்தர்கள் தீர்மானித்தனர். நேற்று, திருப்பணி மேற்கொள்வதற்கான கால்கோள் விழா நடந்தது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், மற்றும் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் கால்கோள் விழாவை ஏற்று நடத்தினர். காலை 7.00 மணிக்கு விநாயகர் வழிபாடு, மற்றும் சிறப்பு வேள்வியுடன் விழா துவங்கியது. நவரத்தினக் கற்கள், ஐம்பொன் காசுகள், பூமியில் வைத்து, புனித தீர்த்தம், மற்றும் பால் ஊற்றப்பட்டு கால்கோள் விழா நடந்தது. கோவில் கமிட்டி நிர்வாகிகள், சுற்று வட்டார கிராம மக்கள் பலரும் பங்கேற்றனர்.