திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடலிலும், நாழிகிணற்றிலும் புனித நீராடா அனுமதிக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் கொரோனா 2ம் கட்ட அலை வேகமாக பரவியதை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 26ம் தேதி முதல், ஜூலை 4ம்தேதி வரை திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. ஆனாலும் வழிகாட்டு றிமுறைகளை பின்பற்றி தினசரி பூஜைகள் மட்டும் நடந்தது. சில கட்டுப்பாடுகளுடன் ஜூலை 5ம் தேதி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால் கடற்கரை, நாழிகிணறு போன்ற பகுதிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராட அனுமதி அளிக்கப்பட்டது. நேற்று ஏராளமான பக்தர்கள் கடலிலும், நாழிக்கிணற்றிலும் புனித நீராடிய பின்னர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் தேங்காய் உடைத்து வழிபட அனுமதி வழங்கப்படவில்லை.