பதிவு செய்த நாள்
29
ஆக
2021
02:08
இந்த விநாயகர் சதுர்த்தியை, இயற்கைக்கு உகந்த முறையில் கொண்டாடும் வகையில், மேக் யுவர் ஓன் கணேஷா என்ற புது முறையை, சோ அவேர் என்ற தன்னார்வலர் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.விநாயகர் சதுர்த்திக்காக பிளாஸ்டிக், பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பெயின்ட், மற்றும் ரசாயனங்கள் போன்றவற்றை பயன்படுத்தி பல வண்ணங்களில், பல அளவில் விநாயகர் சிலைகள் செய்யப்படுகின்றன.இயற்கைக்கு தீங்கு விளைவிக்கும் வகையில், பல மக்காத பொருட்களை பயன்படுத்தி, சிலை செய்வதை தடுக்க வேண்டும் என்ற நோக்கில், கோவை ரத்தினபுரி பகுதியில் உள்ள, சோ அவேர் என்ற தன்னார்வ நிறுவனம், விதை விநாயகர் சிலைகளை அறிமுகம் செய்தது.அதன் மூலம் களி மண்ணால் செய்யப்பட்ட, விநாயகர் சிலைகளில் விதைகளை வைத்து, சிலை செய்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த ஆண்டு இதில் புதுமையை புகுத்த, நம் கைகளால் சிலையை வடிவமைக்கும் வகையில், மேக் யுவர் ஓன் கணேஷா என்ற பெயரில், சிலை செய்வதற்கான கிட் விற்பனை செய்கின்றனர்.இந்த கிட்ல் விநாயகர் சிலை செய்வதற்காக, இரண்டரை கிலோ களிமண், சிலை வைப்பதற்கான பலகை, வண்ணம் தீட்ட பிரஷ், நூல், காட்டன் துணி, காகிதப்பூ, சிலை வடிவமைக்க தேவையான மரத்தால் ஆன பொருட்கள் அடங்கிய தொகுப்பை, 299 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்.இதில் வீட்டில் விளைவிக்கக்கூடிய, வெண்டைக்காய், தக்காளி, கத்தரிக்காய், துளசி, மிளகாய் உள்ளிட்ட விதைகளை வைத்து வழங்குகின்றனர்.இதை பயன்படுத்தி, அவரவரின் சொந்த படைப்பாற்றலால் சிலைகளை உருவாக்கலாம். சிலைகளை வழிபட்ட பின்னர், வீட்டு தோட்டத்தில் தண்ணீர் ஊற்றி கரைத்தால், ஒரு சில நாட்களில் செடி முளைக்க ஆரம்பித்து விடும்.வீடுகளில் குடும்பத்தினருடன் ஒன்றிணைந்து, சிலை செய்து இந்த விநாயகர் சதுர்த்தியை மகிழ்ச்சியாக கொண்டாட இது ஒரு நல்ல வாய்ப்பு.களிமண்ணால் ஆன, 4 இன்ச் முதல் இரண்டரை அடி வரையான விதை விநாயகர் சிலைகளும், விற்பனை செய்யப்படுகின்றன.