ஆயர்பாடி மக்கள் தங்களின் தலைவரான நந்தகோபரின் வீட்டில் கண்ணன் பிறந்த செய்தியறிந்து வாத்தியங்களை இசைத்து மகிழ்ந்தனர். அந்தணர்கள் வேத மந்திரங்களை சத்தமாக ஓதினர். பசுக்கொட்டில்கள், வீதி எங்கும் கோபியர்கள் மாக்கோலம் இட்டனர். மஞ்சள், செஞ்சூரணத்தால் சிலர் ரங்கோலி வரைந்தனர். வாசனை திரவியங்களைப் பூசியும், பன்னீர் தெளித்துக் கொண்டும் ஆடினர். பசுக்கள், கன்றுகளுக்கு பூமாலைகளை சூட்டினர். வாசலை தோரணங்களால் அலங்கரித்தனர். பலவிதமான காதணி, கழுத்தணி, முத்து கம்மல், அட்டிகைகளை அணிந்து கொண்டு கண்ணனைத் தரிசிக்க நந்தகோபரின் அரண்மனைக்கு விரைந்தனர். ‘‘வசுதேவ் கிருஷ்ணா! எங்களின் அன்புச் செல்வமே! நீடூழி வாழ்ந்து எங்களைக் காத்தருள வேண்டும்” என பிரார்த்தனை செய்தனர். நந்தகோபரும், யசோதையும் பொன், பொருள், ஆடை, பசுக்கள் என தானம் அளித்து மகிழ்ச்சியை கொண்டாடினர்.