பக்தரான அக்ரூரர் ஆயர்பாடியில் இருந்து கண்ணன், அவரது அண்ணன் பலராமரை மதுரா நகருக்கு அழைத்து வந்தார். இவர்களைக் கண்ட மதுராவாசிகள் அவர்களின் அழகில் மெய் மறந்தனர் அந்த வழியாக முதுகு வளைந்த வயதான பெண் ஒருத்தி சந்தன கிண்ணத்துடன் எதிர்ப்பட்டாள். “குணத்தால் உயர்ந்த பெண்ணே! சந்தனத்தை எங்கு எடுத்துச் செல்கிறாய்?” எனக் கேட்டார் கண்ணன். ‘‘அசுரனான கம்சனுக்கு பணிவிடை செய்து என் வாழ்நாளை வீணாகி விட்டேன். இன்று ஒருநாளாவது சந்தனத்தை நல்லவர்களுக்கு அளித்து நன்மை பெற விரும்புகிறேன்” என்றாள். கண்ணன், பலராமருக்கு சந்தனம் பூசினாள். கண்ணன் தன் விரல்களால் அவளின் முகவாய், கால்களை வேகமாக அழுத்தினார். கணப் பொழுதில் கூன் நிமிர்ந்த அவள் அழகிய பெண்ணாக மாறினாள். சந்தனம் அளித்த புண்ணியத்தால் உடனடியாக பலன் ஏற்பட்டதை எண்ணி மகிழ்ந்தாள். இப்பெண் யார் தெரியுமா? கைகேயியிடம் பணிப்பெண்ணாக இருந்து ராமரைக் காட்டுக்கு அனுப்பக் காரணமான மந்தரை. மறுபிறவியில், கண்ணனுக்கு சந்தனம் அளித்து பாவம் நீங்கப் பெற்றாள். வளைந்த கூன் நிமிர்ந்தது போல கண்ணனை நம்பினால் நடக்காததும் நடக்கும்.