ஆசிரியர் ராமகிருஷ்ணன் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் பணியாற்றி வந்தார். திடீரென அவரை ஆரம்ப வகுப்புகளுக்கு ஆசிரியராக மாற்றி விட்டனர். உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கு பாடம் கற்பித்தது போய், குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி கற்பிக்க வேண்டிய சூழல். தன் கவுரவத்திற்குக் குறை ஏற்பட்டது போல் வருந்தினார். புதிய பணியில் சேர்வதா வேண்டாமா என குழம்பினார். அவருக்கு கோகுல் என்ற நண்பர் இருந்தார். இருவரும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் காஞ்சி மஹாபெரியவரை தரிசிப்பது வழக்கம். ஒருமுறை விஜயவாடாவில் முகாமிட்டிருந்தார் மஹாபெரியவர். அவரை தரிசிக்க கோகுல் சென்ற போது, ‘எங்கே உன் நண்பன் ராமகிருஷ்ணன்’ எனக் கேட்டார். ‘அவனை ஆரம்பப் பள்ளிக்கு மாற்றம் செய்து விட்டதால் மனசு சரியில்லை என்று சொல்லி வீட்டிலேயே இருந்து விட்டான்’ என்றார் கோகுல். ‘‘மகான் அப்பய்ய தீட்சிதரின் பரம்பரையில் வந்தவன் அவன். ஒருமுறை ஊமத்தங்காயைச் சாப்பிட்டு வேண்டுமென்றே தன்னை பைத்தியமாக மாற்றிக் கொண்டார் தீட்சிதர். அந்த நிலையிலும் அம்பாளை நினைக்கிறோமா என்பதை அறியவே அப்படி செய்தார். அப்போது அவரால் பாடப்பட்டது தான் அம்பாள் துதியான ‘உன்மத்த சதகம்’.
அப்பேர்ப்பட்ட தெய்வீக பரம்பரையில் வந்த ராமகிருஷ்ணனுக்கு கடவுள் அருளால் கிடைத்த வாய்ப்பு தான் இது. குழந்தைகளுக்குக் கல்வி கற்பிப்பதைப் போன்ற புனிதப்பணி வேறுண்டா? குழந்தைகளின் மனதில் ‘அறம் செய விரும்பு’ போன்ற அறநெறிகளைக் கற்பிப்பது எவ்வளவு பெரிய தொண்டு? அறநெறிகளை கற்கும் குழந்தைகள் நல்லவர்களாக வளர்ந்தால் ராமகிருஷ்ணனுக்கு எத்தனை புண்ணியம் சேரும்? இதையெல்லாம் யோசித்துப் பார்க்கச் சொல். இந்தப் பணி முந்தைய பணியை விட உயர்வானது என அறிவுறுத்து. பூர்வ ஜன்ம புண்ணியம் இருந்தால் மட்டுமே ஆரம்பப் பள்ளி ஆசிரியராகும் பாக்கியம் ஒருவருக்குக் கிடைக்கும். குழந்தைகளை நல்வழிப்படுத்துவதன் மூலம் எதிர்கால இந்தியாவை நிர்மாணிக்கும் பொறுப்பை ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் நிறைவேற்றுகிறார்கள். அந்தப் பணியைக் கட்டாயம் ஏற்கும்படி நான் சொன்னதாகச் சொல்’’ என அறிவுறுத்தினார்.
சுவாமிகள் சொன்ன விளக்கத்தை கேட்ட ராமகிருஷ்ணன் உடனடியாக பணியில் சேர்ந்தார். பின் மஹாபெரியவரை சந்தித்து ஆசி பெற்றார். ‘வாழ்வில் மிக நல்ல காரியம் செய்தாய்’ என வாழ்த்தினார் மஹாசுவாமிகள்.