பதிவு செய்த நாள்
30
ஆக
2021
10:08
கேரளப் பெண்கள் குலதெய்வமாக கருதும் சக்குளத்துகாவு பகவதி கோயில் கோட்டயம் அருகில் உள்ளது. இங்கு பிடிமண் எடுத்து வீடு கட்டத் தொடங்கினால் தடங்கலின்றி நிறைவேறும்.
கோயில் இருக்கும் பகுதி ஒரு காலத்தில் காடாக இருந்தது. ஒருநாள் வேடன் ஒருவன் தன் மனைவியுடன் காட்டிற்கு விறகு வெட்ட வந்த போது ஒரு பாம்பு சீறியபடி நின்றது. கோடரியால் அதை வெட்ட முயன்ற போது தப்பி ஓடியது. கொல்லாமல் விட்டால் தன்னை பழி வாங்குமோ என எண்ணி விரட்டிச் சென்றான். புற்றுக்குள் செல்ல முயன்ற போது அதை வெட்டினான். ஆனாலும் தப்பித்தது. சற்று நேரத்தில் புற்றிலிருந்து நீர் ஊற்று கிளம்பியது. இதைக் கண்டு வேடன் திகைத்த போது, அங்கு வந்த நாரதர் புற்றை அகற்றும்படி தெரிவித்தார். வேடனும் அப்படியே செய்ய ஊற்றில் இருந்து தேனும், பாலும் வெளியேறியது. அதனடியில் வனதுர்க்கையின் சிலை தென்பட்டது. அச்சிலையை நாரதர் பிரதிஷ்டை செய்தார். அதன்பின் வேடன் குடும்பத்தினர் அம்மனை வழிபட்டு வந்தனர். பிற்காலத்தில் பட்டமனை குடும்பத்தாரால் கோயில் எழுப்பப்பட்டது.
கோயில் அருகில் இருந்த குளத்து நீர் சர்க்கரை போல இனித்தது. அந்த சர்க்கரை குளம், அதைச் சுற்றியுள்ள காடு இரண்டையும் சேர்த்து ‘சக்குளத்துக்காவு’ எனப் பெயர் ஏற்பட்டது. நாரதர் பிரதிஷ்டை செய்த வனதுர்க்கையே ‘சக்குளத்தம்மா’ என்னும் பெயரில் இங்கிருக்கிறாள். 1981ல் எட்டு கைகள் கொண்ட அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்தனர். சிவன், ஐயப்பன், விஷ்ணு, கணபதி, முருகன், யட்சி, நாகதேவதை, வனதேவதை சன்னதிகளும் இங்குள்ளன.
கேரளக் கோயில்களில் திருக்கார்த்திகையன்று சொக்கப்பனை ஏற்றப்படும் கோயில் இது மட்டுமே. மார்கழி மாதப்பிறப்பு முதல் 12 நாட்கள் வரை நோன்பிருக்கும் பெண்கள் இருமுடி கட்டி வந்து தரிசனம் செய்கின்றனர். இது ‘பெண்களின் சபரிமலை’ என அழைக்கப்படுகிறது. மார்கழி முதல் வெள்ளியன்று பெண்களை சக்தி வடிவமாக கருதி அவர்களின் பாதங்களை கழுவும் ‘நாரி பூஜை’ நிகழ்ச்சி நடக்கும். புரட்டாசி ஆயில்ய நட்சத்திரத்தன்று நாகதோஷம் போக்கும் நாகயட்சி வழிபாடு நடக்கிறது.
எப்படி செல்வது:
* திருவனந்தபுரத்தில் இருந்து 135 கி.மீ.,
* கோட்டயத்தில் இருந்து 35 கி.மீ.,