கோகுலஷ்டமி: திண்டிவனத்தில் வெண்ணை திருடும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஆக 2021 05:08
திண்டிவனம்: கோகுலஷ்டமியை யொட்டி வெண்ணை திருடும் நிகழ்ச்சி திண்டிவனத்தில் நடந்தது. புராண காலத்தில் வீடுகளில் தாழியில் வைக்கப்பட்டு இருக்கும் வெண்ணைகளை, பாலகர் கிருஷ்ணர் திருடி உண்ணும் லீலைகள் மகாபாரதத்தில் அழகாக விவரிக்கப்பட்டு இருக்கும். அதேபோன்ற ஐதீகத்தை திண்டிவனத்தில், யாதவர் சமூகத்தினர் வருடந்தோறும் கோகுலாஷ்டமி தினத்தன்று செய்து வருகின்றனர். கோகுலஷ்டமி தினமான இன்று திண்டிவனம் கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலில், யாதவர் சமூகத்தை சேர்ந்த சிறுவர்கள் உள்பட ஏழு இளைஞர்கள் கிருஷ்ணர் வேடம் அணிந்துகொண்டு பல்வேறு பகுதிகளுக்கு கோவிலில் இருந்து புறப்பட்டு சென்றனர். பின்னர் தங்கள் செல்லும் பகுதியில் உள்ள யாதவர் வீடுகளில், கிருஷ்ணர் வருகைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் பூஜையில் பங்கேற்று வீட்டில் உள்ளவர்களை ஆசிர்வதிக்கின்றனர். அதன் பின்னர் அங்கு கிடைக்கும் பட்சணங்களை உண்டு விட்டு அங்கிருக்கும் வெண்ணையை (சொம்பில் திருடிக்கொண்டு) எடுத்துக்கொண்டு கோவிலுக்கு கொண்டு வந்து சேர்த்து விடுகின்றனர். இந்த ஐதீக நிகழ்ச்சி பல ஆண்டுகளாக திண்டிவனத்தில் நடந்து வருகிறது.