பதிவு செய்த நாள்
01
செப்
2021
11:09
திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், நேற்று இரவு பக்தர்களின்றி சுவாமி, அம்மனுக்கு குடவருவாயில் தீபாராதனை நடந்தது. திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணி திருவிழாவில், தினசரி சுவாமி குமரவிடங்கபெருமானும், வள்ளியம்மனும், காலை மற்றும் மாலையில் தனி , தனி சப்பரத்தில் எழுந்தருளி கோயில் உள்பிரகாரத்தில் உலா வந்தனர்.
5ம் திருவிழாவான நேற்று, அதிகாலை 5:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, தொர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது. காலையில் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளியம்மன் எழுந்தருளல், சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. மாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி, கிரிப்பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது . பின்னர் இரவு 7:00 மணிக்கு சுவாமி குமரவிடங்கபெருமானும், வள்ளியம்மனும் கோயில் உள்பிரகாரத்தில் தனி, தனி சப்பரத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து சுவாமி, அம்மனுக்கு குடவருவாயில் தீபாராதனை நடந்தது. சுவாமி ஜெயந்திநாதருக்கு எதிர் சேவை தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமியும், வள்ளியம்மனும் உள்பிரகாரத்தில் உலா வந்தனர். இந்நிகழ்ச்சியில், பகதர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் அன்புமணி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.