ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் ஆவணி மாதம் நடைபெறும் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி புறப்பாடு மற்றும் உறியடி உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான கிருஷ்ண ஜெயந்தி, உறியடி உற்சவம் நேற்று தொடங்கியது. இதை முன்னிட்டு நேற்று காலை 9.15 மணிக்கு உற்சவர் ஸ்ரீ நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு காலை 9.45 மணிக்கு ஸ்ரீ பண்டாரம் ஆஸ்தான மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு முற்பகல் 11 மணி முதல் மதியம் 1.30 மணிவரை திருமஞ்சனம் கண்டருளினார். மதியம் 1.30 மணிமுதல் மதியம் 2.30 மணி வரை அலங்காரம் அமுது கண்டருளினார். பின்னர் மாலை 5.30 மணி வரை பொது ஜன சேவை நடைபெற்றது. அங்கிந்து மாலை 6.00 மணிக்கு ஸ்ரீநம்பெருமாள் புறப்பட்டு மாலை 6.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். அதனைத் தொடர்ந்து இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கிருஷ்ணர் சன்னதியில் கிருஷ்ணன் பிறப்பும், குழந்தைக்கு சங்கில் பால் கொடுப்பதைச் சித்தரிக்கும் சங்குப்பால் நிகழ்ச்சியும் நடைபெற்றன. உறியடி உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று (புதன்கிழமை) காலை 7.00 மணிக்கு ஸ்ரீ கிருஷ்ணன் புறப்பாடு நடைபெற்றது. வெண்ணெய் விளையாட்டு கண்டருளி காலை 7.30 மணிக்கு கிருஷ்ணன் சன்னதிக்கு வந்து சேர்வார். பின்னர் மாலை 3.00 மணிக்கு ஸ்ரீ நம்பெருமாள் உபயநாச்சியார்கள் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணன் சகிதம் புறப்பட்டு கருட மண்டபத்திற்கு மாலை 3.30 மணிக்கு வந்து சேர்கிறார். பின்னர் இரவு 9.00 மணிக்கு ஸ்ரீ நம்பெருமாள் கருட மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.15 மணியளவில் கருடமண்டப வளாகத்திலேயே உறியடி உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.