பதிவு செய்த நாள்
02
செப்
2021
10:09
சென்னை :சட்டசபை கூட்டத் தொடர் முடிந்ததும், கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர் என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் பொதுச் செயலர் முத்துகுமார் தாக்கல் செய்த மனு:ஹிந்து சமய அறநிலையத் துறை ஊழியர்களுக்கான பணி விதிகளை, தமிழக அரசு வகுத்துள்ளது. அர்ச்சகர், ஓதுவார், பரிசாரகர் பணியிடங்களில் நியமனம் செய்ய, நிர்வாக அதிகாரி, உதவி கமிஷனருக்கு அதிகாரமில்லை. அறநிலையத்துறை சட்டப்படி, அறங்காவலருக்கு தான் அதிகாரம் உள்ளது.
எனவே, ஹிந்து சமய அறநிலையத் துறை ஊழியர்கள் பணி விதிகளில், சிவாச்சாரியார்களின் உரிமைகளை மீறும் வகையிலான சில விதிகளை, ரத்து செய்ய வேண்டும். ஆகம விதிகளுக்கு முரணாக, அர்ச்சகர்களை நியமிக்க கூடாது என, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.பெரம்பலுார் மாவட்டம், சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோவில் பரம்பரை பூசாரிகள் எட்டு பேர் தாக்கல் செய்த மனுவில், எங்கள் குடும்பங்களில் இருந்து, கோவிலுக்கு பூஜை செய்யும் மூத்தவர் இறந்தால், அவரது வாரிசு தான் பூசாரி
யாக நியமிக்கப்படுவர்.பல ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
அறநிலையத் துறை வகுத்த விதிகளில், வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எனவே, இந்த விதிகள் செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரப்பட்டது.
இம்மனுக்கள், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தன.மதுரகாளியம்மன் கோவில் பூசாரிகள் சார்பில், மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, மதுரகாளியம்மன் கோவிலைப் பொறுத்தவரை, எட்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்களை தான் அர்ச்சகர்களாக நியமிக்க முடியும். பூஜை செய்யும் தந்தை இறந்து விட்டால், அவரது வாரிசு தான் பூசாரியாக வர முடியும். புதிய விதிகளில், குறைந்தபட்ச வயது, 18; அதிகபட்சம், 35 என கூறப்பட்டுள்ளது. இந்த விதிகள் அவர்களுக்கு பொருந்தாது, என வாதிட்டார். அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, இவ்வழக்கில், பதில் மனு தாக்கல் செய்கிறோம். 10 ஆண்டுகளாக அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை. தற்போது, அறங்காவலர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சட்டசபை கூட்டம் முடிந்ததும், அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர், என்றார்.
முதல் பெஞ்ச் உத்தரவு:ஹிந்து சமய அறநிலையத் துறை சட்டப்படி, குறிப்பிட்ட கோவில்களில் நுாற்றாண்டுகளாக உள்ள நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்; குறிப்பிட்ட கோவில்களில் அறங்காவலர்கள், பூசாரிகள் நியமனம், மரபுப்படி தான் இருக்க வேண்டும் என, மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி, அட்வகேட் ஜெனரல் வாதிட்டார். இவ்வழக்கில், நான்கு வாரங்களில், அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை, ஐந்து வாரங்களுக்கு தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில், தங்கள் தரப்பையும் சேர்க்க கோரி மனுக்கள் தாக்கல் செய்தவர்கள், வழக்கின் ஆவணங்களை பெற்றுக் கொள்ள, முதல் பெஞ்ச் அனுமதி அளித்தது.