பதிவு செய்த நாள்
06
செப்
2021
06:09
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது, கலெக்டர் வினீத் தலைமையில் நடந்த கூட்டத்தில், எஸ்.பி., சஷாங் சாய், டி.ஆர்.ஓ., சரவணமூர்த்தி, தாராபுரம் சப் கலெக்டர் ஆனந்த்மோகன், ஆர்.டி.ஓ., ஜெகநாதன், கீதா உள்ளிட்டோர், விழா நடைமுறை குறித்து பேசினர்.கலெக்டர் பேசியதாவது:விநாயகர் சதுர்த்தி விழாவை, பொது இடங்களில் கொண்டாட அனுமதியில்லாத சூழலில், பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே கொண்டாடலாம். சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபராக சென்று, அருகில் உள்ள நீர்நிலையில் சிலையை கரைப்பதற்கும் அனுமதி வழங்கப்படுகிறது.தனிநபர்களுக்கு மட்டும் அனுமதி பொருந்தும்; பொது அமைப்புகள், சதுர்த்தி விழா கொண்டாடுவது முழுவதும் தடை செய்யப்படுகிறது. தனிநபர்கள், வழிபட்ட சிலைகளை, அருகில் உள்ள கோவிலின் அருகே வைத்துச்செல்ல அனுமதிக்கப்படுகிறது.ஹிந்து அறநிலையத்துறை மூலம், சிலைகளை கரைக்க உரிய ஏற்பாடு செய்யப்படும். அனுமதி தனிநபருக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், மேற்கண்ட வழிமுறையை மீறுபவர்கள் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.விழாவுக்காக, பொருட்கள் வாங்க செல்லும் மக்கள், முககவசம் அணிந்து சென்றுவர வேண்டும். வெளியே வரும் போது சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், வழிகாட்டு நெறிமுறைகள் சரிவர பின்பற்றப்படுவதை, சார் அலுவலர்கள் கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு, கலெக்டர் பேசினார்.