Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரத்தில் தேரோட்டம்: நடராஜா ... சென்னை பார்த்தசாரதி கோவிலில் தொடர்கிறது சர்ச்சை! சென்னை பார்த்தசாரதி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அண்ணாமலையார் முதல் ரங்கநாதர் வரை ரூ.1,500 கோடி: ஆண்டவன் சொத்து ஆக்கிரமிப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2012
10:06

சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், ஆன்மிக திருப்பணியை தலையாய கடமையாக கொண்டு, கிராமங்கள் தோறும் ஆலயங்களை எழுப்பினர். கோவிலுக்கு ஊழியம் செய்தவர்களுக்கு "ஊழிய தானமாக நஞ்சை, புஞ்சை நிலங்களையும் வழங்கினர். "கோவிலில் வழிபாடு செய்யாமல் கடவுளை பட்டினி போடக்கூடாது; கடவுளுக்கு சேவகம் செய்பவர்களும் பசி, பட்டினியால் வாடக்கூடாது என்பதற்காக மன்னர்கள் கோவிலுக்காக நிலங்களை ஒதுக்கினர்.

சைவ கோவில்களில் மகாசிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், பிரதோஷம், பவுர்ணமி, தைப்பூசம், சஷ்டி வழிபாடு, பங்குனி உத்திரம், வைணவ கோவில்களில் புரட்டாசி வழிபாடு, வைகுண்ட ஏகாதசி, ராமநவமி, திருவோணம், மார்கழி வழிபாடு, சித்திரை திருவிழா... என ஒவ்வொரு விசேஷத்திற்கு தனித்தனியாக நிலங்களை பிரித்து கொடுத்தனர். அந்த நிலங்களை பராமரிப்பதில் கிடைக்கும் நிதியை கொண்டு கோவில் விழாக்களை சிறப்பாக நடத்த, நிலதானம் செய்தனர்.அதேபோன்று, கோவில் குருக்கள், பண்டிதர், ஓதுவார், இசைக்கலைஞர்களுக்கு ஊதியத்திற்கு பதிலாக நிலங்கள் ஒதுக்கி கொடுத்தனர். அதில் விவசாயம் செய்து வருவாய் எடுத்துக்கொண்டு கோவிலுக்கு ஊழியம் செய்ய வேண்டும். தவிர, நேர்த்திக்கடனாக கோவிலுக்கு தானமாக கொடுக்கப்பட்ட நிலங்களும் உள்ளன. கோவில் நிலங்களை அனுபவித்து வந்தவர்கள், அந்த நிலத்தை காலப்போக்கில், தங்களது பெயருக்கு பட்டா மாறுதல் செய்து கொண்டனர். நில உரிமை பதிவேடுகள், நில உடமை மேம்பாட்டு திட்டம் (யுடிஆர்) மூலம் மாற்றம் செய்யப்பட்ட போதும், கம்ப்யூட்டர் சிட்டாவாக பதிவேடுகளில் மாற்றம் செய்தபோதும், கோவில் நிலங்கள் தனியார் பெயருக்கு மாறி விட்டன. பெயர் மாற்றம் செய்ததன் பின்னணியில் அரசியல் கட்சியினருக்கும், அதிகாரிகளுக்கும் முக்கிய பங்கு உண்டு. எழுதப்படிக்க தெரியாதவர்களின் பெயரில் மாற்றம் செய்த கோவில் சொத்துக்களை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மாற்றி எழுதி விற்பனை செய்தனர்.மேலும், கோவில் நிலத்தை அனுபவித்து வந்தவர்களின் வம்சாவழிகள், கோவில் திருப்பணிகளை மறந்து அந்த நிலத்தை அவர்களுக்கு உரிமையாக்கிக் கொண்டனர். கடந்த 1963ல் கோவில் நிலம் (இனாம் ஒழிப்பு சட்டம், ஒழிப்பு மற்றும் ரயத்து வாரியாக மாற்றுதல்) சட்டத்தின் கீழ் கோவில் சேவைக்காக மாற்றப்பட்டது. அதன்பின், கடந்த 1996ல் கோவில் நிலங்கள் கோவில் பெயருக்கு மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டது.

பட்டா மூலம் சிக்கியது: இந்த வகையில் பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்ட கோவில் நிலம், கோவை மாவட்டத்தில் 4,518 ஏக்கர், இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 10, 094 ஏக்கரும், ஈரோடு மாவட்டத்தில் 4,827 ஏக்கரும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள 4,518 ஏக்கரில், 2,733 ஏக்கர் நிலம் கோவில்களின் பெயரில் உள்ளது. மீதமுள்ள 1,785 ஏக்கர் கோவில் நிலம், தனியார் பெயர்களில் உள்ளது.அதில், 863 ஏக்கர் கோவில் நிலம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக 55 வழக்குகள் விசாரிக்கப்பட்டு, 42 வழக்குகள் தீர்வு செய்யப்பட்டது. அதன் மூலம் 596 ஏக்கர் நிலம் கோவில் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 13 வழக்குகள் விசாரணை நிலையில் உள்ளது.மேலும், வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 41 வழக்குகளில் 706.40 ஏக்கர் தனியார் வசமுள்ளது. வருவாய் கோட்டாட்சியர் விசாரணை முடிந்த 12 வழக்குகளில் 206 ஏக்கர் நிலம் கோவில் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது, மாவட்ட வருவாய் அலுவலர் (கோவில் நிலம்) பிரிவில், மொத்தம் 900.4 ஏக்கர் நிலம் தனியார் வசம் ஆக்கிரமிப்பில் உள்ளதை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அறநிலையத்துறை வசமுள்ள நிலம்: வருமானத்தின் அடிப்படையில் பெரிய, சிறிய கோவில்கள் வகைப்படுத்தப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வருமானமுள்ள 515 பெரிய கோவில்களும், 1,800 சிறிய கோவில்களும் உள்ளன. இதுகுறித்து, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் புகழேந்திரன் கூறியதாவது:கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்கள் உள்ளடங்கிய, இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டலத்தில், நஞ்சை நிலம் 1,130 ஏக்கர், புஞ்சை நிலம் 7,055 ஏக்கர், மானாவாரி நிலம் 184 ஏக்கர் உள்ளது. மனையிடங்கள் 16 லட்சத்து 43 ஆயிரத்து 148 சதுர அடி உள்ளது. கட்டடங்கள் வகையில் எட்டு லட்சத்து எட்டாயிரத்து 186 சதுர அடியில் 1,417 கட்டடங்கள் உள்ளன. இதில், கோவை மாவட்டத்தில் மட்டும், நஞ்சை நிலம் 548.43 ஏக்கர் உள்ளது. அதில், குத்தகைக்கு 353 ஏக்கர் விடப்பட்டுள்ளது. காலி இடமாக 25 ஏக்கரும், வழக்கு விசாரணைக்கு உட்பட்டு 170 ஏக்கரும் உள்ளது.கோவை மாவட்டத்தில் புஞ்சை நிலம், 2,062.62 ஏக்கர் உள்ளது. அதில், ஆயிரத்து 44 ஏக்கர் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. காலி இடமாக 245 ஏக்கரும், வழக்கு விசாரணை நிலுவையில் 373 ஏக்கரும் உள்ளது. மீதமுள்ள 387.43 ஏக்கர் நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது. மானாவாரி நிலம் 1.36 ஏக்கர் அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ளது. கோவை மாவட்டத்தில் மனையிடங்கள் இரண்டு லட்சத்து 53 ஆயிரத்து 316 சதுர அடி உள்ளது. அதில், இரண்டு லட்சத்து 18 ஆயிரத்து 35 சதுர அடி நிலம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. கோவில் பராமரிப்பில் 4,610 சதுர அடி நிலமும், 28,671 சதுர அடி நிலம் காலியிடமாகவும் உள்ளது. மீதமுள்ள இரண்டாயிரம் சதுர அடி நிலத்தின் மீது வழக்கு விசாரணை உள்ளது. கட்டடங்கள் வகையில், கோவை மாவட்டத்தில் மூன்று லட்சத்து இரண்டாயிரத்து 956 சதுர அடியில் 672 கட்டடங்கள் உள்ளன. அதில், 561 கட்டடங்கள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. கோவில் பராமரிப்பில் 33 கட்டடங்கள் உள்ளன. ஆக்கிரமிப்பாளர்கள் வசம் 6,480 சதுர அடியில் 27 கட்டடங்களும், வழக்கு விசாரணை நிலுவையில் 3,435 சதுர அடியில் 35 கட்டடங்களும் உள்ளன.இவ்வாறு, இணை ஆணையர் தெரிவித்தார்.

மொத்தம் ரூ.1,500 கோடி மதிப்பு: பட்டா பெயர் மாற்றம் செய்த வகையில், கோவை மாவட்டத்தில் 900 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பாளர்கள் வசம் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை வசமுள்ள நிலத்தில் 930 ஏக்கர் ஆக்கிரமிப்பில் உள்ளது. கோவை மாவட்டத்தில் மொத்தம் 1,830 ஏக்கர், கோவில் நிலம் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ளது ஆதாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது.கிராம பகுதிகளில் நிலத்தின் மதிப்பு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 15 லட்சமும், மாநகர பகுதியில் ஒரு சென்ட்க்கு 15 லட்சமும், மாநகரை ஒட்டியுள்ள பகுதியில் ஒரு ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாயும் மதிப்பு உள்ளதாக அறநிலையத்துறையினர் கணித்துள்ளனர். அந்தவகையில், கோவை மாவட்டத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட கோவில் நிலத்தின் மதிப்பு 1,500 கோடி ரூபாய் என்பது எல்லோரையும் மிரள வைக்கிறது.

ஸ்ரீ ரங்கநாதர் சொத்து...: கோவை, வெள்ளலூர் எல்.ஜி., நகர் பேஸ்-1 பின்பக்கம் திருச்சி ஸ்ரீரங்கம், ரங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான 54 ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்நிலத்தை எட்டு பேர் குத்தகைக்கு எடுத்து, விவசாயம் செய்து வந்தனர். ஸ்ரீரங்கநாத சுவாமி கோவில் தர்ம ஸ்தாபனம் என்ற அறக்கட்டளையின் பெயரில் இந்நிலம் உள்ளது. இதன் முதல் நிர்வாக அறங்காவலராக விஜயராகவ அய்யங்கார், இரண்டாவதாக வெங்கட்ரமண அய்யங்கார், மூன்றாவதாக சீனிவாச அய்யங்கார் ஆகியோர் இருந்தனர். இவர்களுடன் பிற சமூகத்தை சேர்ந்தவர்கள் அறங்காவலர்களாக இருந்தனர். கோவில் பெயரில் இருந்த ஆவணங்களை தனியார் பெயருக்கு மாற்றி, சமீபத்தில் வேறு நபருக்கு விற்பனை செய்துள்ளது இந்து சமய அறநிலையத்துறைக்கு தெரியவந்துள்ளது. ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோவில் நிலத்தை தற்போது சமப்படுத்தி லே-அவுட்கள் பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதன் பின்னணியில் ஆளுங்கட்சி பிரமுகர்கள் இருப்பதால் அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகிறது. கோவில் நிலத்தை கோவிலுக்கு சேர்க்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவர்கள், இந்த பிரச்னை குறித்து முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர்.

சுப்ரமணியர் சொத்து விற்பனை: பொள்ளாச்சி சுப்ரமணியசுவாமி கோவிலுக்கு சொந்தமான 6.33 ஏக்கர் நிலம் மாக்கினாம்பட்டி கிராமத்தில் உள்ளது. தற்போது அந்த நிலம் தனி நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது குறித்து, அறநிலையத்துறை மாவட்ட வருவாய் அலுவலருக்கு (கோவில் நிலம்) புகார் வந்துள்ளது. அதிகாரிகள் விசாரணையில் பல்வேறு திடுக் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கோவில் நிலத்தின் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு கோவில் மேம்பாட்டு பணிகள் செய்ய வேண்டும். ஆனால், கோவில் நிலத்தின் மூலம் வருமானம் கிடைக்கவில்லை என்று கூறி, அந்த நிலத்தை குறைந்த விலைக்கு விற்று, பணத்தை கோவிலுக்கு செலுத்தியுள்ளனர். அதற்கு வருவாய்த்துறையில் தாசில்தார், துணைக்கலெக்டர் பணியில் இருந்தவர்கள் உடந்தையாக இருந்துள்ளனர். வருவாய்த்துறை, கோவில் அறங்காவலர் பொறுப்பில் இருந்தவர்கள் சேர்ந்து அந்த நிலத்தை பட்டா மாறுதல் செய்து விற்பனை செய்துள்ளனர். அதற்காக, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அந்த லே-அவுட்டில் இடங்களை இனாமாக ஒதுக்கியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவில் நிலத்தை விற்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. அவர்களால் நிர்வாகம் செய்ய முடியாத போது, நிலத்தை அறநிலையத்துறை வசம் ஒப்படைத்து விட வேண்டும். ஆனால், அதிகாரிகள் துணையோடு 19 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை 53 சைட்களாக பிரித்து சூறையாடியுள்ளனர். அந்த நிலம் கட்டாயம் கோவிலுக்கு திரும்ப மீட்கப்படும். இவ்வாறு, அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இனிமேலாவது செய்வார்களா? வி.ஏ.ஓ.,க்கள் மூலம் கிராமத்தின் பழைய ஆவணங்களை ஆய்வு செய்து கோவில் நிலங்களை முழுமையாக கண்டறிய வேண்டும். கண்டறியப்பட்ட கோவில் நிலங்களுக்கு வேலி அமைத்து பாதுகாத்து பராமரிக்க வேண்டும். அந்த இடங்களில் வருவாயை பெருக்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.கோவில் நிலம் முழுவதும் மீட்கப்பட்டு, வாடகை வசூலிக்கும் போது, ஒவ்வொரு கோவிலின் வருவாயும் உயரும். கோவில் வருவாயை கொண்டு மக்களுக்கு தேவையான நலத்திட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். நிலம், வருவாய் இல்லாத கோவில்களை, மற்ற கோவில்களின் வருவாயை கொண்டு மேம்படுத்த வேண்டும்.முதல்வர் ஜெயலலிதா, கோவில் நிலம் மீட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். அரசியல் தலையீடுகளை களைந்து கோவில் நிலங்களை காக்க வேண்டும் என, பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலையார் சொத்தும்...: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம், பொள்ளாச்சியில் மாக்கினாம்பட்டி கிராமத்திலும், பொள்ளாச்சி நகரத்திலும் உள்ளது. பொள்ளாச்சி நகரில் பல்லடம் ரோடு பெரியார் காலனி வார்டு எண் 12ல் "பழைய சாராய கோர்ட் அருகில் உள்ளது.பழங்கால கோவில், குடியிருப்புகள், காலி இடங்கள் என மொத்தம் 12 ஏக்கர் பரப்பில் உள்ளது. அந்த இடம் தற்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட தனி நபரால் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. அருணாச்சலேஸ்வரர் கோவில் தர்ம காரியங்களுக்கு பயன்படுத்த ஒப்படைக்கப்பட்ட நிலத்தை தனி நபருக்கு பட்டா மாற்றம் செய்து அனுபவித்து வருகின்றனர். கோவில் நிலத்தை மீட்டு, பராமரிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

"டயல் செய்யுங்க...: கோவில் நிலங்களை மீட்பதற்காக தனியாக மாவட்ட வருவாய் அலுவலர் பணியிடத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்படுத்த கடந்த 2004ல் அரசு உத்தரவிட்டது. கோவை, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் இந்த பணியிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் மேலும் ஐந்து மாவட்டத்தில் கோவில் நிலம் மீட்புக்காக மாவட்ட வருவாய் அலுவலர் பணியிடத்தை உருவாக்க அரசு முடிவு செய்துள்ளது. கோவையிலுள்ள கோவில் நிலம் டி.ஆர்.ஓ., கட்டுப்பாட்டில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய எட்டு மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில் கோவில் நிலங்கள் பற்றி புகார்கள் ஏதாவது இருந்தால் 0422 - 224 8999 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.

"விசுவாச அதிகாரிகள்: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும், தனித்து செயல்படும் அதிகாரம் மாவட்ட வருவாய் அலுவலருக்கு (கோவில் நிலம்) வழங்கப்பட்டுள்ளது. நில உடமை மேம்பாட்டு திட்டத்தின் மூலம், நிலத்தை பராமரித்தவர்கள் பெயருக்கு நிலப்பட்டா வழங்கிய போது ஏற்பட்ட குளறுபடிகளால் கோவில் நிலங்கள் தனியார் பெயருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டது. வருவாய்த்துறையினரின் குளறுபடி, கோவில் நிலங்கள் கைநழுவி செல்ல முக்கிய காரணமானது. மாவட்ட வருவாய் அலுவலர் கோவில் நிலங்களை கண்டுபிடித்து, அவற்றை மீட்டு அறநிலையத்துறை வசம் ஒப்படைத்து வருகிறார்.அந்த நிலங்களுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் வேலி அமைத்து, கோவிலுக்கு சொந்தமான நிலம் என அறிவிப்பு பலகையை உடனடியாக வைப்பதில்லை. மேலும், கோவில் நிலங்களுக்கு அதிகபட்சமாக குத்தகை தொகை நிர்ணயம் செய்வதில்லை. இதனால் வருவாய் இழப்பும், நிலம் ஆக்கிரமிப்பும் ஏற்படுகிறது.அறநிலையத்துறை அதிகாரிகள் அரசியல் கட்சியினர், ஆக்கிரமிப்பாளர்களுடன் கைகோர்த்து "சன்மானத்திற்கு விசுவாசமாக செயல்படுகின்றனர். இதனால், கோவில் நிலங்கள் தனியார் வசம் தொடர்கிறது.

ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்கள்: * மந்திரகிரி வேலாயுதசுவாமி கோவில், செஞ்சேரிமலை - 228.38 ஏக்கர்
* திருவேங்கட நாதர் பெருமாள், வைத்தியநாத சுவாமி கோவில், சூலூர்- 258 ஏக்கர்
* பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவில் இடம், மாக்கினாம்பட்டி - 6.33 ஏக்கர்
* பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவில் இடம், மார்ச்சநாயக்கன்பாளையம் - 8.32 ஏக்கர்
* உக்கடம் நரசிம்ம பெருமாள் கோவில், குனியமுத்தூர் - 7 ஏக்கர்
* உக்கடம் நரசிம்ம பெருமாள் கோவில், கழிவு நீர் குட்டை அருகில் - 8 ஏக்கர்
* பெரியகடைவீதி லட்சுமி நாராயண வேணுகோபால் சுவாமி கோவில், செல்வசிந்தாமணி குளம் எதிரில் - 12 ஏக்கர்
* பிரசண்ட விநாயகர் கோவில், மார்ச்சநாயக்கன்பாளையம் - 28.25 ஏக்கர்
* மாட்டேகவுண்டன் கோவில், காளியாபுரம் - 1.21 ஏக்கர்இதுதவிர நீதிமன்ற வழக்கு விசாரணையில் கோவில் நிலங்கள் ஏராளமாக உள்ளன.

ஓராண்டில் மீட்கப்பட்ட கோவில் நிலங்கள்: (10 ஏக்கருக்கும் அதிகமானவை)

* பொங்காளியம்மன் கோவில், தேவணாம்பாளையம் - 20.5 ஏக்கர்
* பகவதியம்மன் கோவில், தேவம்பாடி - 16.36 ஏக்கர்
* அழகு திருமலைராயப்பெருமாள், நல்லூர்- 19.43 ஏக்கர்
* பகவதியம்மன் கோவில், கிணத்துக்கடவு - 15.62 ஏக்கர்
* விநாயகர் கோவில், மெட்டுவாவி - 14.29 ஏக்கர்
* சோளியம்மமன் (எ) பனப்பட்டி அம்மன், வடசித்தூர் - 36.70 ஏக்கர்
* வெங்கடேச பெருமாள் கோவில், கரியாஞ்செட்டிபாளையம்- 20.49 ஏக்கர்
* மாதங்கியம்மன் கோவில், சேர்வக்காரன்பாளையம் - 36.40 ஏக்கர்
* அமணீஸ்வரர் கோவில், ஜல்லிபட்டி - 24.70 ஏக்கர்
* அமணீஸ்வரர் கோவில், தொண்டாமுத்தூர் - 15.3 ஏக்கர்
* கரியகாளியம்மன் கோவில், தொண்டாமுத்தூர்- 39.42 ஏக்கர்
* மாரியம்மன் கோவில், தொண்டாமுத்தூர் - 23.58 ஏக்கர்
* அமணீஸ்வரர் கோவில், குரும்பபாளையம் - 13.56 ஏக்கர்
* அங்காளம்மன் கோவில், ஏரிப்பட்டி
- 26.68 ஏக்கர்
* அங்காளம்மன் கோவில், நாட்டுக்கல்பாளையம்- 14.40 ஏக்கர்
* புத்தாரம்மன் கோவில், செஞ்சேரிமலை, சூலூர்- 25.59 ஏக்கர்
* செஞ்சேரிமலையம்மன் கோவில், ஜல்லிபட்டி - 12.8 ஏக்கர்
* காணியப்பசுவாமி கோவில், அரசூர் - 36.9 ஏக்கர்
* வரதராஜ பெருமாள், அனுமந்தராயர் கோவில், கணியூர் - 15.61 ஏக்கர்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆவணி வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, ராஜகோபுரம்  அருகே உள்ள ... மேலும்
 
temple news
அயோத்தி; செப். 7ல் சந்திர கிரகணம் நிகழ உள்ளதால் அன்று அயோத்தி ராமர் கோவிலில் மதியம் 12:30 மணிக்கு கோயில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மக்கள், இன்று, ஓணம் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இதையொட்டி, கேரளாவில், பல்வேறு ... மேலும்
 
temple news
சென்னை ; சென்னையில் ஓணம் பண்டிகையையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.ஓணம் ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் நேற்று துவங்கிய திருவோண விருந்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவோண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar