பதிவு செய்த நாள்
26
ஜூன்
2012
10:06
சிதம்பரம்: சிதம்பரம், நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சன தரிசனத்தையொட்டி, நேற்று தேரோட்டம் நடந்தது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆனித் திருமஞ்சன தரிசன விழா, கடந்த 15ம் தேதி துவங்கியது. 11ம் நாள் விழாவான தேரோட்டம் நேற்று நடந்தது. நேற்று அதிகாலை நடராஜர், சிவகாம சுந்தரி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்தனர். காலை 5 மணிக்கு அலங்கரித்த மூலவர் நடராஜர், சிவகாம சுந்தரி அம்பாள் தேரில் எழுந்தருளினர். 8 மணிக்கு தேர் நிலையில் இருந்து புறப்பட்டது. நடராஜா கோஷம் முழங்க பக்தி பரவசத்துடன் பக்தர்கள் தேர் இழுத்தனர். பகல் 12.30 மணிக்கு நடராஜர், சிவகாம சுந்தரி அம்பாள் தேர்கள் மேல வீதி கஞ்சித் தொட்டி வந்தது. மாலை 4 மணிக்கு பருவதராஜகுல சமூகத்தினர் பாரம்பரிய வழக்கப்படி நடராஜருக்கு சீர் வரிசைகள் செய்து, பட்டு சாற்றி படையல் செய்தனர். பின், மீண்டும் தேர் வடம் பிடித்து இழுத்து செல்லப்பட்டு, மாலை தேர் நிலையை அடைந்தது. இரவு தேரில் இருந்து சுவாமியை ஆயிரம்கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்து லட்சார்ச்சனை நடந்தது. இன்று 26ம் தேதி அதிகாலை 3 மணிக்கு நடராஜர், சிவகாம சுந்தரி அம்பாளுக்கு ஆயிரங்கால் மண்டப முகப்பில் அபிஷேகமும், திருவாபரண அலங்காரம், பஞ்சமூர்த்தி புறப்பாடு நடக்கிறது. மாலை 2 மணிக்குள் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடராஜரும், சிவகாம சுந்தரி அம்பாளும் நடனம் புரிந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் தரிசன விழா நடக்கிறது.