பதிவு செய்த நாள்
10
செப்
2021
03:09
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில், விநாயகர் சதுர்த்தியையொட்டி, மராட்ட விநாயருக்கு, 25 கிலோ அளவிலான சந்தனத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன.
உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவில், மன்னர் ராஜராஜசோழனால் 1010ம் ஆண்டு கட்டப்பட்டது. பின்னர் 13ம் நுாற்றாண்டில் பாண்டியர்களால் அம்மன் சன்னதியும், விஜயநகர அரசர்களால் சுப்பிரமணியர் சன்னதியும் உருவாக்கப்பட்டது. தொடர்ந்து மராட்டியர் ஆட்சியில், இரண்டாம் சரபோஜி மன்னரால், 5 அடி உயரத்தில் பிரமாண்ட தோற்றத்தில், விநாயகர் சன்னதி அமைக்கப்பட்டது. அவருடைய ஆட்சிக்காலத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியன்று, விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடைபெற்றது. பின்னர் அவருடைய காலத்திற்கு பிறகு சிறப்பு வழிபாடுகள் மட்டுமே நடந்தது. சந்தனக்காப்பு அலங்காரம் எதுவும் நடைபெறவில்லை. பின்னர், கடந்த 2018ம் ஆண்டு முதல், விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 25 கிலோ சந்தனத்தை கொண்டு விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, அவல், பொரி போன்றவை வைத்து படைக்கப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.