பதிவு செய்த நாள்
12
செப்
2021
03:09
மைசூரு : தசரா அம்பாரியில் அமர்ந்து, ஊர்வலம் வரும் சாமுண்டீஸ்வரியை இம்முறை சர்வ அலங்காரத்துடன் சிறப்பு வாகனத்தில் சாமுண்டி மலையிலிருந்து அரண்மனை மைதானத்துக்கு ஊர்வலமாக கொண்டு வர ஏற்பாடு நடக்கிறது.
ஆண்டு தோறும் மைசூரு தசரா நேரத்தில், சாமுண்டீஸ்வரி விக்ரகத்தை, அரசு வாகனத்தில் மைசூரு அரண்மனைக்கு கொண்டு வந்து, தங்க அம்பாரியில் அமர்த்தி, மைசூரின் நகர் வீதிகளில் ஊர்வலம் நடத்துவது வழக்கம். இதை காண்பதற்காகவே, லட்சக்கணக்கான மக்கள், நாள் முழுவதும் காத்திருப்பர். ஜம்பு சவாரியில், யானை மீது ஊர்வலமாக வரும் சாமுண்டீஸ்வரி அன்னையை, பக்தி பரவசத்துடன் காண்பர். ஆனால் இரண்டு ஆண்டுகளாக, கொரோனாவால் மைசூரு தசரா எளிமையாக நடக்கிறது. தசரா வைபவங்களை கண்டு ரசிக்க, பொது மக்களால் முடியவில்லை. இம்முறை அதற்கு வாய்ப்பளிக்க, மைசூரு மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சாமுண்டீஸ்வரியை சர்வ அலங்காரத்துடன், சாமுண்டி மலையிலிருந்து, அரண்மனை மைதானம் வரை, அலங்கரிக்கப்பட்ட, சாரட் வாகனத்தில் ஊர்வலமாக கொண்டு வந்து வரப்படும். மக்கள் சாலை ஓரங்களில் நின்று, சாமுண்டீஸ்வரியை தரிசிக்கலாம்.