பதிவு செய்த நாள்
14
செப்
2021
05:09
ஓசூர்: ஓசூர், ஜலகண்டேஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் கரைக்க, மக்கள் எடுத்து வந்த விநாயகர் சிலைகள் குப்பையில் வீசப்பட்டிருந்தன. எதிர்ப்புக்கு பின் சிலைகள் ஏரியில் கரைக்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், வீடு, கோவில்களில் பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலைகளை, ராமநாயக்கன் ஏரிக்கரையிலுள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் கரைக்க நேற்று மக்கள் எடுத்து வந்தனர். அவற்றை கோவில் நிர்வாகிகள் சிலர், நாங்கள் கரைத்து கொள்கிறோம் எனக்கூறி வாங்கிக்கொண்டனர். மக்கள் தெப்பக்குளத்தின் அருகே பூஜை செய்து விட்டு, விநாயகர் சிலையை கொடுத்து விட்டு சென்றனர். இந்நிலையில் அச்சிலைகள், கோவில் வளாகத்தின் ஒதுக்குபுறத்தில், குப்பையோடு குப்பையாக வீசப்பட்டிருந்தன. இதையறிந்த சிவசேனா கட்சி மாநில அமைப்பு செயலாளர் முரளிமோகன் தலைமையிலான இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், டவுன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின், சிவசேனா கட்சியினர் குப்பையில் கிடந்த விநாயகர் சிலைகளை தாங்களாக முன்வந்து எடுத்துச்சென்று, தர்கா சந்திராம்பிகை ஏரியில் கரைக்க ஏற்பாடு செய்தனர்.