பதிவு செய்த நாள்
15
செப்
2021
04:09
புதுச்சேரி : ஞானேஸ்வரி அம்மையாருக்கு சதாபிஷேக வைபவம், புதுச்சேரி ஓங்கார ஆசிரமத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், ராஜா சாஸ்திரி தலைமையில், கணபதி ஹோமம், நட்சத்திர ஹோமம், ஆயுஷ் ஹோமம் நடத்தப்பட்டது.
ஞானேஸ்வரி அம்மையாருக்கு மலர் கிரீடம் சூட்டி, நிறை மாலை சாற்றப்பட்டது. பெரியவர்கள் அம்மையாரை வாழ்த்தினர். சிறியவர்கள் ஆசி பெற்றனர். உறவினர்கள், நண்பர்கள், பக்தர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.மாலை நடந்த சிறப்பு கூட்டத்தில், சுவாமி ஓம்கார நந்தா தலைமை தாங்கி, ஞானேஸ்வரி அம்மையார் 40 ஆண்டுகளாக ஓங்கார ஆசிரமத்திற்கு செய்த பணிகளை விவரித்தார். அவர் பேசுகையில், ஆன்மிகத்தில் சிறந்து விளங்கும் ஞானேஸ்வரி அம்மையார், பேச்சு, எழுத்தாற்றல் மிக்கவர். மூன்று நுால்கள் எழுதியுள்ளார். ஓங்காரம் ஆன்மிக மாத இதழ் பணிகள் அனைத்தையும் கவனித்து வருகிறார். அமெரிக்கா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளதுடன், இந்தியா முழுவதும் பயணம் செய்து எல்லா ஷேத்திரங்களையும் தரிசனம் செய்து மெய்ஞ்ஞான நிலையில் உயர்ந்துள்ளார். ஜீவன்முக்தர் பூஜ்ய துறவி லட்சுமிபாய்க்கு பிறகு, ஓங்கார ஆசிரமத்தை வழிநடத்தி செல்கிறார் என்றார்.