புரட்டாசி முதல் சனி உற்சவம்: வெறிச்சோடிய திருவண்ணாமலை பெருமாள் கோயில்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18செப் 2021 08:09
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனி உற்சவம் பக்தர்களின்றி நடந்தது. பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் திருவண்ணாமலை வெறிச்சோடி காணப்பட்டது.
இக்கோயிலில் புரட்டாசி 5 சனிக்கிழமைகளிலும் பல்லாயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். தற்போது நோய் பரவல் தடை காரணமாக சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு, பக்தர்கள் கோயிலுக்கு வருவதை தவிர்க்குமாறு கோவில் நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று காலை 6:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு திருமஞ்சனம் பூஜைகளை மதுரை கோபி பட்டர் செய்தார். ராஜ அலங்காரத்தில் பெருமாள் காட்சி அளித்தார். கோயில் பணியாளர்கள், பாதுகாப்புக்கு இருந்த போலீசார் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் துளசி, பூமாலை, தேங்காய், பழம் விற்பனையின்றி வியாபாரிகள் வேதனை அடைந்தனர். கோயிலுக்கு செல்லும் அனைத்து வழித்தடங்களிலும் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பக்தர்களை அனுமதிக்க மறுத்து திருப்பி அனுப்பினர். இதனால் சாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.