பதிவு செய்த நாள்
23
செப்
2021
11:09
திருப்பதி:“திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்,” என, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்தார்.
ஆந்திர பிரதேசத்தில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான, ஒய்.எஸ்.ஆர்., - காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இது குறித்து தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி கூறியதாவது: திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்காக, மாதந்தோறும், ஆன்லைன் வாயிலாக வெளியிடப்படும் டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை, கொரோனா தொற்று காரணமாக தேவஸ்தானம் குறைத்துள்ளது.கடந்த இரு வாரங்களாக, திருப்பதியில் உள்ள சீனிவாசத்தில், இலவச சர்வதரிசன டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது அதன் எண்ணிக்கை, 8,000 ஆக உயர்த்தப்பட்டு வினியோகிக்கப்படுவதால், அங்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே, அதை கருத்தில் வைத்து, அந்த டோக்கன்களை ஆன்லைன் வாயிலாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும், 26ம் தேதி முதல், அக்டோபர், 31ம் தேதி வரை, தினமும், 8,000 டிக்கெட்டுகள் முன்பதிவின் கீழ் வைக்கப்பட உள்ளது. சர்வதரிசன டோக்கன்கள் முன்பதிவு செய்து திருமலைக்கு தரிசனத்திற்காக வரும் பக்தர்கள், தடுப்பூசியின் இரண்டு, டோஸ்களை செலுத்தி இருக்க வேண்டும். அதற்கான சான்றிதழ் அல்லது, மூன்று நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழுடன் வந்தால் மட்டுமே, தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.இவ்வாறு, அவர் கூறினார்.