பதிவு செய்த நாள்
23
செப்
2021
12:09
சென்னை: கோவில் சொத்துக்களுக்கு நியாயமான வாடகையை நிர்ணயிக்கும்படி, அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பவும், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, வாடகை மறு நிர்ணயத்தை உறுதி செய்யவும், அறநிலையத்துறை கமிஷனருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நோட்டீஸ்: ஈரோடு மாவட்டம், பெருந்துறையில், கொங்கு வெள்ளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பெருந்துறையில் உள்ள செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சொந்தமான, 4.02 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு பெற்று, 1982ல் பள்ளி துவங்கப்பட்டது. குத்தகை நிலம் தவிர்த்து, கூடுதலாக 2.50 ஏக்கர் நிலத்தையும் விளையாட்டு மைதான மாக பயன்படுத்தி வருகிறது. குத்தகை நிலத்துக்கும், கூடுதலாக பயன்படுத்தும் நிலத்துக்கும், வாடகை நிர்ணயம் தொடர்பாக, கோவில் நிர்வாக அதிகாரி, பள்ளி நிர்வாகத்துக்கு, 2018 ஜூலையில், நோட்டீஸ் அனுப்பினார். இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் பள்ளி நிர்வாகம் தாக்கல் செய்த மனுவில், நியாயமான வாடகையை உயர் நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. தற்போது, மாத வாடகையாக, 85 ஆயிரத்து, 796 ரூபாய் செலுத்துகிறோம்.
நிலுவை: வாடகை நிர்ணயம் தொடர்பாக, உயர் நீதிமன்றம் கையாண்ட முறையை எதிர்த்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, மீண்டும் வாடகை நிர்ணயம் செய்வதை ஏற்க முடியாது என, கூறப்பட்டுள்ளது. மனுவை, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார். அறநிலையத்துறை சார்பில், வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆஜரானார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கோவில் சொத்துக்கள் தொடர்பான வாடகையை, அறநிலையத் துறை சட்டப்படி அமைக்கப்பட்ட குழு தான் நிர்ணயிக்க வேண்டும். சொத்து இருக்கும் பகுதியில் நிலவும் சந்தை மதிப்பை ஆராய்ந்து, நியாயமான வாடகையை குழு நிர்ணயிக்கும். எனவே, இந்தக் குழு நிர்ணயிக்கும் வாடகை தான் செல்லத்தக்கது. நிர்வாக அதிகாரி அல்லது அறங்காவலர்கள் நிர்ணயித்த வாடகையால் பாதிக்கப்பட்டதாக கருதுபவர், அதை எதிர்த்து, அறநிலையத்துறை கமிஷனரிடம் மேல்முறையீடு செய்யலாம். சட்ட நடைமுறையை பின்பற்றி, வாடகையை நிர்ணயிக்க, நில உரிமையாளருக்கு உரிமை உள்ளது. அதன்படி வாடகை நிர்ணயித்து நோட்டீஸ் அனுப்பினால், அதுகுறித்த ஆட்சேபனையை சமர்ப்பிக்க, வாடகைதாரருக்கு உரிமை உள்ளது.
ஆட்சேபனை: இந்த வழக்கைப் பொறுத்தவரை, மனுதாரர் தரப்பில் ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதை அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டியதுள்ளது. அதிகாரிகள் இறுதி உத்தரவு பிறப்பித்த பின், அந்த உத்தரவால் மனுதாரர் பாதிக்கப்பட்டதாக கருதினால், கமிஷனரை அணுகலாம். நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், நீதிமன்றத்தை மனுதாரர் அணுகி உள்ளார். இதை ஏற்க முடியாது.எனவே, மனுதாரர் தெரிவித்த ஆட்சேபனைகளை பரிசீலித்து, தகுதி அடிப்படையில் இறுதி உத்தரவை, எட்டு வாரங்களில் பிறப்பிக்க வேண்டும். நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக, சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். கோவில் சொத்துக்களுக்கு நியாயமான வாடகையை நிர்ணயிக்கும்படி, அனைத்து அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கையை, அறநிலையத்துறை கமிஷனர் பிறப்பிக்க வேண்டும். வாடகை மறு நிர்ணயம்; கூடுதல் வாடகையை, மூன்று ஆண்டு களுக்கு ஒரு முறை நிர்ணயம் செய்வதை, கமிஷனர் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.