திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று கூட்டம் அலைமோதியது. திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த சில மாதங்களாக கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கோயிலில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்ட நாட்களில், தினசரி பக்தர்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் நேற்று முதல் அதிகாலை 5 மணிக்கு கோயில் திறந்த உடன் அனுமதிக்கப்பட்டனர் . தொடர்ந்து இரவு 8 மணி வரை சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் குரு ஸ்தலத்தில் ஒன்றாக உள்ளது. அதனால் வியாழக்கிழமை எப்போதும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்நிலையில் கூடுதலாக 3 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் அனுமதிக்கப்பட்டதால் நேற்று வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசனத்தில் நின்ற பக்தர்கள் சுமார் 5 மணி நேரத்திற்கு நீண்ட வரிசையில் காத்து நின்று சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோல் தமிழக அரசின் அறிவிப்புபடி கொரோனா தடுப்பு வடிக்கை காரணமாக இன்று ( வெள்ளிக் கிழமை), நாளை மற்றும் நாளை மறுநாள் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி இல்லை.