திருப்புவனம்:கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் நடந்து வந்த ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவு பெற்றன.
கீழடி, அகரம், கொந்தகை, மணலுார் உள்ளிட்ட தளங்களில் பிப். 13ல் தொடங்கிய அகழாய்வு பணிகள் நிறைவு பெற்றன. மணலுாரில் எதிர்பார்த்த அளவு தொல்லியல் பொருட்கள் கிடைக்காததால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. மற்ற மூன்று தளங்களிலும் தலா எட்டு குழிகள் தோண்டப்பட்டு உறைகிணறுகள், தந்தத்தால் செய்யப்பட்ட பகடை, தங்க காதணி, உறைகிணறுகள், சிவப்பு நிற பானை உள்ளிட்ட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன.
அகழாய்வு தளங்களை தொல்லியல் துறை சார்பில் ட்ரோன் மூலம் புகைப்படம் எடுக்கும் பணி மட்டும் நடந்து வருகிறது. கீழடியில் புகைப்படம் எடுக்கப்பட்டுவிட்டது. கொந்தகையில் நேற்று படங்கள் எடுக்கப்பட்டன. அகரத்தில் ஒருசில நாட்களில் படங்கள் எடுக்கப்பட்ட உள்ளன. திறந்த வெளி அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளதால் அக்குழிகள் மீண்டும் நிரந்தரமாக மூடப்படாது என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.தொடர்ந்து மழை பெய்து வருவதால் அகழாய்வு குழிகளில் தண்ணீர் தேங்காத வண்ணம் தார்ப்பாய் போட்டு மூடப்பட்டுள்ளது. எனினும் பார்வையாளர்கள் அகழாய்வு தளங்களை காண வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.