மதுரையில் பாண்டியர் காலத்து சதுஸ்த்ர லிங்கம் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25செப் 2021 07:09
மதுரை : மதுரை தெப்பக்குளம் - விரகனுார் வரை 60 அடி சாலை பணிக்காக ஐராவதநல்லுார் பகுதி கொந்தகை கால்வாய் அருகே ரோட்டை தோண்டும் போது கிடைத்த 2 அடி உயரமுள்ள சிவலிங்கம் பாண்டியர் கால சதுஸ்த்ர லிங்கம் என மதுரை அரசு அருங்காட்சிய காப்பாட்சியர் மருதுபாண்டியன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: சிலை ஐராவதநல்லுார் வி.ஏ.ஓ., சுரேஷ் மூலம் தெற்கு தாலுகா அலுவலகம் கொண்டு வரப்பட்டது. பின்னர் தாசில்தார் முத்துப்பாண்டி உத்தரவுபடி வருவாய் அதிகாரிகள் காந்தி மியூசிய வளாகத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தனர். சதுஸ்த்ர வடிவ லிங்க வழிபாடு கி.பி., 10 - 11ம் ஆண்டுகளில் பாண்டியர் காலங்களில் இருந்துள்ளது. அதனால் இச்சிலை கி.பி., 11ம் நுாற்றாண்டின் பாண்டியர் காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம். சிவலிங்க வழிபாடு என்பது சங்க இலக்கிய காலங்களிலேயே உள்ளது. துாண் வழிபாடு தான் பின்னர் லிங்க வழிபாடாக மாறியது. இதற்கு சான்றாக செங்கல்பட்டு மாவட்டம் நெட்ரம்பாக்கம் என்ற ஊரில் கிடைத்த லிங்கத்தில் தமிழி எழுத்துக்கள் உள்ளன. இதே போல் ஆந்திராவில் குடிமல்லம் என்ற ஊரில் கிடைத்த மிகப்பழமையான சிவலிங்கம் சென்னை அரசு அருங்காட்சியகத்தில் உள்ளது என்றார். முன்னதாக ஐவராவதநல்லுார் பகுதி மக்கள் லிங்கத்திற்கு மாலை அணிவித்து வழிபட்டனர்.