பதிவு செய்த நாள்
25
செப்
2021
08:09
திருப்பதி : திருப்பதியில் நேரடி இலவச சர்வ தரிசன டோக்கன்கள் தராததால் அதிருப்தி அடைந்த தமிழக பக்தர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதை அடுத்து கைது செய்யப்பட்டனர். தேவஸ்தான நிர்வாகம் முன்னறிவிப்பு இல்லாமல் மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் தமிழக பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.ஆந்திராவில், திருமலை ஏழுமலையான் தரிசனத்திற்காக திருப்பதியில் உள்ள சீனிவாசம் பக்தர்கள் தங்கும் விடுதியில், தினசரி 8,000 இலவச சர்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.
ஆன்லைன்: பல மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் ஓரிடத்தில் கூடுவதால் கொரோனா தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக கருதிய தேவஸ்தானம், செப்., 25 முதல் இலவச சர்வ தரிசன டோக்கன்களை ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்யும் வசதியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, திருப்பதி சீனிவாசத்தில் அளிக்கப்பட்டு வந்த இலவச தரிசன டோக்கன்கள் செப்., 26 முதல் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே செப்., 23ம் தேதி அன்றே, வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைக்கான இலவச தரிசன டோக்கன்கள், திருப்பதியில் உள்ள சீனிவாசத்தில் அளிக்கப்பட்டு விட்டன. இது குறித்து எவ்விதமான அறிவிப்பையும் தேவஸ்தானம் வெளியிடவில்லை. மேலும் தேவஸ்தான மக்கள் தொடர்பு துறையும் எவ்வித தகவல்களையும் அளிக்கமுன்வரவில்லை.
இதை அறியாத பக்தர்கள், இலவச டோக்கன்களை பெற நேற்று காலை திருப்பதியில் உள்ள சீனிவாசத்தில் திரண்டனர்.அப்போது ஊழியர்கள், 24ம் தேதிக்கான டோக்கன்கள் ஏற்கனவே அளிக்கப்பட்டுவிட்டதாக கூறி பக்தர்களை கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால், தேவஸ்தானம் மேற்கொள்ளும் திடீர் முடிவுகளால் பாதிக்கப்பட்ட பக்தர்கள், ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதை ஊழியர்கள் கண்டுகொள்ளாததால், தமிழகத்தின் அரியலுாரைச் சேர்ந்த பக்தர்கள் 16 பேர் சீனிவாசம் முன்பு, திருமலைக்கு செல்லும் வாகனங்களை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியலில்: அவர்களுடன் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் திருப்பதி போலீசில் புகார் அளித்ததால், அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பக்தர்களை கைது செய்து அழைத்து சென்றனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆண்டுதோறும் திருமலைக்கு 75 சதவீதத்திற்கு மேலாக தமிழக பக்தர்கள் தரிசனத்திற்காக வருகின்றனர். அவர்களுக்கு தேவையான எவ்வித வசதிகளையும் தேவஸ்தானம் அளிப்பதில்லை. இதுபோல் முன்னறிவிப்பு இல்லாமல் தேவஸ்தானம் மேற்கொள்ளும் முடிவால், தமிழக பக்தர்கள் மட்டுமே அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்ததாக கருதப்படுவதால் பக்தர்கள் பலர் கோவிந்த மாலை அணிந்து பாதயாத்திரையாக திருமலையை நோக்கி பயணப்படுகின்றனர்.தற்போது இலவச தரிசன டோக்கன்கள் அளிக்கப்படுவதால் பக்தர்கள் முன்பதிவு செய்யாமல் திருமலை பயணத்தை மேற்கொள்கின்றனர். இந்நிலையில், தேவஸ்தானம் மேற்கொள்ளும் திடீர் நடவடிக்கைகள் பக்தர்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்துகின்றன. பக்தர்களுடன் சுமுகமாக உரையாடி அவர்களை சமாதானப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ளாமல், அவர்கள் மீது புகார் அளித்து, அவர்களை கைது செய்வது, தமிழக பக்தர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தேவஸ்தான அறங்காவலர் குழுவில் உறுப்பினராகவும், சிறப்பு அழைப்பாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஆறு பேர், தமிழக பக்தர்களுக்கு ஏற்படும் இதுபோன்ற பிரச்னைகளை தேவஸ்தான அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என, பக்தர்கள் கூறுகின்றனர்.