பதிவு செய்த நாள்
25
செப்
2021
05:09
மதுரை: ‛‛கோவில்களில் பயன்படாமல் உள்ள நகைகள், கடவுளுக்கு பயன்படும் எனில், அதற்காக எந்த விமர்சனத்தையும் தி.மு.க., அரசு எதிர்கொள்ளும், என ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மேம்படுத்தப்பட்ட ஓதுவார் பயிற்சி பள்ளியை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்து, வீர வசந்தராயர் மண்டப புனரமைப்பு பணிகளையும் ஆய்வு செய்தார். உடன் அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, மீனாட்சி அம்மன் கோவிலில், கடந்த 2018 ம் ஆண்டு தீவிபத்தில் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டப புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் ஸ்தபதிகளுக்கு பல முறை டெண்டர் அறிவித்தும் யாரும் டெண்டர் எடுக்க முன்வரவில்லை. எனவே, டெண்டர் ஒப்படைப்பதில் உள்ள சிக்கல்களை தீர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? என ஆய்வு செய்து, 3 ஆண்டுகளுக்குள் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அழகர்கோவில் பாதையை அகலப்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளதால், அந்த பணிகள் விரைவுப்படுத்தப்படும். சோளிங்கர் மற்றும் அய்யர் மலை கோவில்களை தொடர்ந்து மேலும் 5 கோவில்களில் ரோப்கார் சேவை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். குத்தகைக்கு கொடுக்கப்பட்டு உள்ள கோவில் நிலங்கள் ஒன்று கூட கடந்த ஆட்சியில் மீட்கப்படவில்லை. தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளன. கோவில் நிலங்களில் நியாயமான வாடகை நிர்ணயம் செய்வது குறித்து குழு அமைத்து நிர்ணயம் செய்யப்படும்.
கோவில்களுக்கு பக்தர்கள் நன்கொடையாக கொடுக்கப்பட்ட பல்வேறு ஆபரணங்கள், கடந்த 9 ஆண்டுகளாக பயன்படுத்தாமல் உள்ளன. அதில், கடவுளுக்கு பயன்படுவதை நேரடியாக பயன்படுத்தவும், பயன்படுத்த இயலாத நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி, அதன் மூலம் கிடைக்கும் வைப்பு நிதியை கோவில் வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களை 3 மண்டலங்களாக பிரித்து ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் நகைகள் பிரிக்கப்பட்டு உருக்கும் பணிகள் நடக்கும். கோவில்களில் பயன்படாமல் உள்ள எதுவும் கடவுளுக்கு பயன்படும் என்றால் எந்த விமர்சனத்தையும் சந்திக்க தயார். நகைகளை உருக்கும் நடவடிக்கையில் எவ்வித லாப நோக்கும், இல்லாமல் நேர்மையாக, உண்மையாக, தூய்மையாக அரசு செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.