பதிவு செய்த நாள்
27
ஜூன்
2012
12:06
சஷ்டியப்த பூர்த்தி முடித்த முதியவர்கள், வியாதியினால் மருந்து உண்பவர்கள், கர்ப்பிணிகள், பிரம்மச்சாரிகள், சன்யாசிகள் இவர்களை தவிர பிறர் உண்ணா நோன்பு இருக்கலாம் என்கிறது தர்ம சாஸ்திரம். மேலும் சன்யாசிகளுக்கு என்று தனி விரதங்களும் பிரம்மச்சாரிகளுக்கு தனி விரதமும் சாஸ்திரத்தில் உண்டு. விரதம் இருக்கும் பொழுது ஏற்படும் முக்கியமான பயன் மனது தனது செயலை மிகவும் குறைவாக செய்து தன்னில் அடங்கிவிடும். மனமற்ற தூய நிலையில் ஆன்மீக முன்னேற்றம் விரைவாக நடக்கும். பால், பழங்களை உண்டு விரதம் இருத்தல் ஒரு வகை. நீர் கூட குடிக்காமல் விரதம் இருப்பது மற்றொரு வகை. நமது உடலின் தன்மை வாழ்க்கை சூழல் பொருத்து விரதம் இருக்க வேண்டும்.
விரதம் இருக்கும் பொழுது மட்டுமே நம் உடலில் இருக்கும் சக்தியையும் நாம் தினமும் வீணாக்கும் சக்தியின் அளவையும் புரிந்துகொள்ள முடியும். விரதம் இருத்தலில் உணர்வு உறுப்புக்களில் முக்கியத்துவம் பெருவது வாய் எனும் உறுப்பு. பிற உணர்வு உறுப்புக்கள் ஒரு செயலை மட்டுமே செய்யும். ஆனால் வாய் மட்டும் இரு செயலை செய்யும். சுவைத்தல் மட்டும் பேசுதல் என இரு செயல்களை தவிர்ப்பதை அனேக விரதங்களின் அடிப்படையாக இருக்கிறது. சதுர்த்தி,சஷ்டி,ஏகாதசி,பிரதோஷம் ஆகிய திதிகளும், திங்கள் (சோம வாரம்), வியாழன் (குருவாரம்) கிழமைகளில் விரதமும் நமக்கு நன்மையை ஏற்படுத்தும். அன்றைய கோள்களின் நிலை நமது உடலின் சக்தியை மேலும் வலுசேர்க்கும்.
மவுனவிரதம்: மவுனவிரதம் இருப்பது வாய் எனும் உறுப்பின் மற்றொரு விரதமாகும். மவுன விரதத்தால் நமது உடல் மற்றும் மனது தூய்மை ஆகிறது. மவுனவிரதம் அனைவரும் இருக்க தகுந்த ஒரு விரதம். இதில் யாருக்கும் தடையில்லை. உலகின் சிறந்த மொழி மவுனம். தக்ஷ்ணாமூர்த்தி உலகுக்கு அளித்த வேதம். மவுனமாக இருப்பதால் நம்மில் இருக்கும் சக்தியை மிகவும் துல்லியமாக அறியலாம். மவுனவிரதம் இருந்துவந்தால் உங்கள் உள்ளுணர்வு மிகவும் கூர்மையானதாக மாறி உங்களை விழிப்புணர்வாளர்களாக மாற்றும். மவுனவிரதம் இருக்கும் பொழுது சிலர் காகிதத்தில் எழுதி காட்டுவார்கள். மனதை ஒருநிலைப்படுத்தும் நோக்கில் இருக்கும் விரதத்திற்கு இது எதிரான செயல். மவுனவிரதம் இருக்கும் காலத்தில் உங்களை ஒரு ஜடப்பொருளாக பாவித்துக்கொள்ளுங்கள். உங்கள் உடல் செயல்படலாம் ஆனால் சைகை மூலமோ, எழுத்து மூலமோ பேசாதீர்கள். அப்பொழுது தான் மவுனவிரதத்தின் பயனை முழுமையாக உணரமுடியும்.