பதிவு செய்த நாள்
28
செப்
2021
04:09
சென்னை-அனைத்து வழிபாட்டு தலங்களையும், நிபந்தனைகளுடன் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் திறக்க, தாங்கள் உத்தரவிட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழக அரசின் சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கடிதம் எழுதி உள்ளார்.
பாராட்டு: கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: தங்களது பெருமுயற்சி, இடைவிடாத கண்காணிப்பு, அமைச்சர் மற்றும் அனைத்து துறையினரின் கடுமையான உழைப்பால், கொரோனா நோய் தொற்று, தமிழகத்தில் பெருமளவு கட்டுப்படுத்தப் பட்டுள்ளது.ஓய்வின்றி விடுமுறை நாளில் கூட, தாங்களே ஒவ்வொரு மையத்திற்கும் சென்று, பொதுமக்களுக்கு தடுப்பூசி போட்டதை பார்த்து, பணியாளர்களையும், பொதுமக்களையும் உற்சாகப்படுத்தியதை அனைத்து தரப்பினரும் பாராட்டுகின்றனர்.
பள்ளிகள், திரையரங்குகள், சுற்றுலா மையங்கள் ஒவ்வொன்றாக திறக்கப்பட்டு, மக்கள் நடைமுறை வாழ்க்கைக்கு திரும்ப துவங்கி உள்ளனர்.வழிபாட்டு தலங்கள் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் அடைக்கப்பட்டுஉள்ளன. அனுமதிவழிபாடுகள் அடிப்படையில், அனைத்து மதத்தினருக்கும் முக்கிய நாட்களாக இருப்பதால், இந்த நாட்களில் அனைத்து வழிபாட்டு தலங்களையும் பொதுமக்களின் வழிபாட்டுக்கு திறந்து விட, தாங்கள் விரைந்து அனுமதி தர வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.