பதிவு செய்த நாள்
02
அக்
2021
05:10
அவிநாசி: இந்த சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக, திடீர் சர்ச்சை கிளம்பியுள்ளது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி, புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், ராமநாதபுரம் கிராமம், நரியம்பள்ளிபுதுாரில், ஹிந்து சமயநிலையத்துறைக்கு சொந்தமான. பழமை வாய்ந்த அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோவில் உள்ளது.
இந்நிலம், 11.40 ஏக்கர் பாப்பளவு கொண்டது. அங்கு, மின்வாரியம் சார்பில் துனை மின்நிலையம் அமைக்க, திருக்கோவில் தக்கார் தீர்மானத்தின் படியும், ஹிந்து சமய அறநிலையத்துறை சரக உதவி ஆணையர் பரிந்துரைப்படி, கடந்த, 2013, ஏப்.,5ல், 10 ஏக்கர் நிலம், ஒரு கோடியே 51 லட்சத்து 96 ஆயிரத்து 500 ரூபாய்க்கு, ஹிந்து சமய அறநிலையத்துறையினர், மின்வாரியத்துக்கு விற்பனை செய்துள்ளனர். இதுதொடர்பாக, கடந்த, 2011 செப்., 30ல், அரசின் இசைவாணை பெறப்பட்டு, அந்தாண்டு, நவ.18 ல், நாளிதழிலில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிலம் விற்பனை தொடர்பான பொது அறிவிக்கை, திருப்பூர் மாவட்ட அரசிதழில், 2012, டிச., 27 ல் வெளியிடப்பட்டுள்ளது. துறை ஆணையரால் நிர்ணயம் செய்யப்பட்ட கிரைய தொகை, ஒரு கோடியே 51 லட்சத்து 95 ஆயிரத்து 500 ரூபாய், கடந்த, 2013, ஏப்., 4ம் தேதி, திருக்கோவில் தக்காரால் பெறப்பட்டுள்ளது. மறுநாள், ஏப்., 5ம் தேதி, அவிநாசி சார்பதிவாளர் அலுவலகத்தில், மின்வாரியத்தின் பெயரில் பத்திரவுப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இக்கோவில் நிலத்தில், 2009, மார்ச் 31 முதல், மின்சார வாரியம் செயல்பட்டு வருகிறது. 2009 முதல், 2013 வரையிலான இடைப்பட்ட காலகட்டத்தில், கோவில் நிலத்தை பயன்படுத்தி வந்த மின்வாரியத்தினரிடம் இருந்து, எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படவில்லை என, ஹிந்து சமய அறநிலையத்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
அப்படியானால், கோவில் நிலத்தில் மின்வாரியத்தினர் அத்துமீறி நுழைந்து, பயன்படுத்தி வந்தனரா, அதற்கு, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உடந்தையாக இருந்தனரா, என்பது போன்ற சந்தேகம் எழுகிறது. அதே நேரம், கோவில் நிலத்தை விற்பனை செய்து பெறப்பட்டு, வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையிலிருந்து, ஆண்டுக்கு, 16 லட்சம் ரூபாய் வட்டி பெறப்படுவதாக கூறப்படும் நிலையில், இதுவரை கோலில் புனரமைப்புக்கென எந்தவொரு செலவினத்தையும், ஹிந்து சமய அறநிலையத்துறையினர் செய்யவில்லை. எனவே, உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டு, அந்த பத்திரப்பதிவை ரத்து செய்யவும், கோவில் நிலத்தை மீட்டு, கோவில் வசம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.