பதிவு செய்த நாள்
03
அக்
2021
03:10
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய நவகிரஹங்களுக்கென, தமிழகத்தில் சில இடங்களில், சோழ மன்னர் ஆட்சி காலத்தில், நவகிரஹ ஆலயங்கள் கட்டப்பட்டன. அவை, தஞ்சாவூர், கும்பகோணம், திருநள்ளாறு, திருவெண்காடு போன்ற பகுதிகளில் உள்ளன.
சென்னையில் இருந்து, 300 கி.மீ.,க்கும் மேல் துாரம் கொண்ட இக்கோவில்களுக்கு செல்ல, பணம் மற்றும் நேர விரயம் ஆகும்.இதன் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள், தோஷம் மற்றும் பரிகாரங்களுக்கு அங்கு செல்ல தயக்கம் காட்டுகின்றனர். இதுபோன்ற மக்களுக்கு வரப்பிரசாதமாக, புறநகரை சுற்றி நவகிரகத்திற்கென தனித்தனி கோவில்கள் பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டுள்ளன. சென்னை, குன்றத்துார் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் இக்கோவில்கள் உள்ளன. கொளப்பாக்கம் அகஸ்தீஸ்வரர் கோவில் சூரியன் ஸ்தலமாகவும், சோமங்கலம், சோமநாதேஸ்வரர் சந்திரன் ஸ்தலமாகவும் உள்ளன. பூந்தமல்லி, வைத்தீஸ்வரர் செவ்வாய் ஸ்தலமாகவும், கோவூர் திருமேனீஸ்வரர் புதன் ஸ்தலமாகவும், போரூர் ராமநாதேஸ்வரர் குரு ஸ்தலமாகவும் அறியப்பட்டுள்ளன.
மாங்காடு வெள்ளீஸ்வரர் சுக்கிரன் ஸ்தலமாகவும், பொழிச்சலுார் அகஸ்தீஸ்வரர் சனி ஸ்தலமாகவும், குன்றத்துார் திருநாகேஸ்வரர் ராகு ஸ்தலமாகவும், கெருகம்பாக்கம் நீலகண்டேஸ்வரர் கேது ஸ்தலமாகவும் உள்ளன. அறநிலையத்துறை வசம் உள்ள இக்கோவில்களை பிரபலப்படுத்த, 20 ஆண்டுகளுக்கு முன், சுற்றுலா துறை வாயிலாக, இக்கோவில்களை ஒருங்கிணைத்து, நவகிரஹ சுற்றுலா, பேக்கேஜ் முறையில் அரசே நடத்தியது.பின், சில காரணங்களால் இந்த சுற்றுலா திட்டம் கைவிடப்பட்டது. சில ஆண்டுகளாக பிரபலமடைந்து வரும் இக்கோவில்களுக்கு, நவகிரஹ தோஷம் கழிக்க, உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வர துவங்கியுள்ளனர்.தி.மு.க., அரசு, இக்கோவில்களை பிரபலப்படுத்தும் விஷயத்தில் தனி கவனம் செலுத்தி, அறநிலையத் துறை, சுற்றுலா துறை இணைந்து, நவகிரஹ கோவில்களுக்கு பேருந்து சேவையை இயக்க முன்வர வேண்டும். அப்படி செய்தால், கோவில்கள் பிரபலமடைவதுடன், குறைந்த பொருட் செலவில், தோஷம் நீக்கும் பரிகாரங்களை மக்கள் செய்யலாம். அரசுக்கும் வருவாய் கிடைக்கும்.