பதிவு செய்த நாள்
06
அக்
2021
04:10
வள்ளலாரின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை ஏழுகிணற்றில் அவர் வசித்த வீட்டிற்கு சென்று, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மரியாதை செலுத்தினார்.
பின் அவர் அளித்த பேட்டி:சென்னை ஏழுகிணறு பகுதியில், 55 ஆண்டு காலம் வாழ்ந்த வள்ளலார், இந்த இல்லத்தில், 33 ஆண்டுகள் வசித்துள்ளார். அவர் அவதரித்த இந்த நாளில், அவர் வாழ்ந்த இல்லம் வந்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். பசி என்பதே நாட்டில் இல்லாமல் இருக்க வேண்டும் என்ற, அவரின் சேவைகளை பெருமைப் படுத்தும் விதமாக, வடலுாரில், 72 ஏக்கர் பரப்பளவில் வள்ளலார் சர்வதேச மையம் விரைவில் கட்டப்படும். சென்னையில் அவர் வசித்த இல்லத்தை புனரமைக்க அரசு உதவி செய்யும். மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, கோவில்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்த கட்டுப்பாடு ஆண்டு முழுதும் தொடராது. கொரோனா பாதிப்பு நீங்கி இயல்பு நிலைக்கு வந்ததும், அனைத்து நாட்களும் கோவில்களுக்கு சென்று, பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்படுவர்.இவ்வாறு சேகர்பாபு கூறினார்.