திருவனந்தபுரம்:சபரிமலை அய்யப்பன் கோவிலில் கார்த்திகை மாத மண்டல பூஜையின் போது, பக்தர்கள் பாதுகாப்புடன் தரிசனம் செய்ய செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.இங்குள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் கார்த்திகை 1ம் தேதி மண்டல பூஜைகள் துவங்கி, ஜனவரியில் மகர ஜோதி முடியும் வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.கொரோனா பரவல் காரணமாக, பக்தர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சுவாமி தரிசனம் செய்ய கடந்த ஆண்டு அனுமதிக்கப்பட்டனர்.
இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை அடுத்த மாதம் 16ல் துவங்குகிறது. இதையொட்டி செய்யப் பட்டு உள்ள ஏற்பாடுகள்குறித்து, தேவஸ்வம் அமைச்சர் ராதாகிருஷ்ணன் நேற்று மாநில சட்டசபையில் கூறியதாவது:பம்பா, எருமேலி உள்ளிட்ட இடங்களில் மருத்துவமனை மற்றும் தொற்று பரிசோதனை வசதிகளை உருவாக்குவது தொடர்பாக, சுகாதாரம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இணைந்து செயல் திட்டத்தை வகுத்துள்ளனர். தற்போது உள்ள கட்டுப்பாடுகளில் தளர்வுகள் மற்றும் ஒரு நாளில் எத்தனை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்பது குறித்து விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும். மண்டல பூஜைகள் துவங்கி இரண்டு மாதங்களுக்கு பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வசதி, போக்குவரத்து, கழிப்பறை உள்ளிட்டவை குறித்து, தேவஸ்வம் வாரியத்துடன் துறை அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நடத்தி வருகின்றனர்.பக்தர்கள் பாதுகாப்புடன் சுவாமி தரிசனம் செய்ய தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.