பதிவு செய்த நாள்
29
ஜூன்
2012
10:06
திருப்பூர்: திருப்பூரில், ஆக்கிரமிப்பிலுள்ள கோவில் நிலங்களை மீட்பது குறித்து, பல்வேறு துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். திருப்பூர் மாவட்டத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலங்கள் தனியார் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. நீண்ட காலமாக ஆக்கிரமிப்பில் உள்ள இந்த நிலங்கள் குறித்து "தினமலர் நாளிதழில், முழு பக்க செய்தி கட்டுரை கடந்த 24ம் தேதி வெளியானது. இதையடுத்து, கோவில் நிலங்களை மீட்க அதிகாரிகள் களம் இறங்கியுள்ளனர். நேற்று காலை, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் (கோவில் நிலங்கள் ) குழந்தைவேல் தலைமையில், வருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத் துறை, நில அளவைத்துறை, மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. "திருப்பூர் மாநகராட்சி மற்றும் மாவட்ட பகுதிகளில் கோவில் நிலங்கள் எங்கெங்கு உள்ளது; பழைய வருவாய்த்துறை ஆவணங்களின் அடிப்படையில் கோவில் நிலங்கள் குறித்து முழுமையாக விபரம் சேகரிப்பது; நிலத்தின் பரப்பளவு மற்றும் அதன் தற்போதை மதிப்பு, நிலங்களின் தற்போதைய நிலை, ஆக்கிரமிப்பில் இருந்தால் ஆக்கிரமிப்பாளர்கள் பட்டியல் தயாரிப்பது; நில அளவை துறையினர் , கோவில் நிலங்களை முழுமையாக அளவீடு செய்து, அது குறித்த அறிக்கையை உடனடியாக அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. "மாநகராட்சி அதிகாரிகள், கோவில் நிலங்களில் அமைந்துள்ள வணிக வளாகங்களின் அளவு, யார் பெயரில் வரி விதிப்பு செய்யப்பட்டுள்ளது என்ற பட்டியலையும் தயாரிப்பது; கோவில் நிலங்களை மீட்பதற்கு, இந்து சமய அறநிலையத்துறையுடன், வருவாய்த்துறை, மாநகராட்சி, நில அளவை துறையினர் இணைந்து செயல்படுவது எனவும் தீர்மானிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.