சூலூர்: நவராத்திரியை ஒட்டி, கோவில்கள், வீடுகளில் கொலு வைக்கப்பட்டு பூஜைகள் துவங்கின. சூலூர் வட்டார அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா நேற்று துவங்கியது. காலை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் செய்யப்பட்டன. சின்னியம்பாளையம் சிவன் கோவில், காடாம்பாடி ராஜலிங்கம் நகர் சாந்த சிவ காளியம்மன் கோவில்களில் ஒன்பது படிகள் அமைக்கப்பட்டு, பல்வேறு வகையான பொம்மைகள் வைக்கப்பட்டு கொலு பூஜை நடந்தது. இதில், ஏராளமான பெண்கள், குழந்தைகள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். பக்தி பாடல்களை பாடினர். இதேபோல், சூலூர் பகுதியில் பல வீடுகளில் கொலு வைக்கப்பட்டு நவராத்திரி பூஜைகள் துவங்கின. சிறுவர், சிறுமியர் உற்சாகத்துடன் பூஜையில் கலந்து கொண்டனர்.