பதிவு செய்த நாள்
10
அக்
2021
02:10
கோவில்களில் பணிபுரிந்து வரும் தற்காலிக பணியாளர்கள், நிரந்தரம் செய்யப்படுவரா என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் 38 ஆயிரத்து 667 கோவில்கள், மடங்கள், அறக்கட்டளைகள் உள்ளன. இதில், ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகம் வருமானம் உள்ள 536 கோவில்கள், 2 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவான வருவாய் உள்ள 492 கோவில்கள் உள்ளன.
கோவில்களை நிர்வகிக்க கமிஷனர், கூடுதல், இணை, துணை, உதவிக்கமிஷனர், செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள் என, நுாற்றுக் கணக்கானோர் உள்ளனர். ஆனால், பக்தர்களின் தேவையை பூர்த்தி செய்வது, அடிமட்ட பணியாளர்கள் தான்.தமிழக கோவில்களில் தினக்கூலி, தொகுப்பூதியம் அடிப்படையில் 3000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனறனர். அவர்களுக்கு கிடைக்கும் சம்பளம், குடும்பம் நடத்த போதுமானதாக இருப்பதில்லை. எனவே, அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை, பல ஆண்டு காலமாக இருந்து வருகிறது.
ஆட்சி மாற்றம்: கடந்த ஆட்சியில் முதல்வராக இருந்த பழனிசாமி, அறநிலையத் துறை கோவில்களில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்கள் 2,000 பேர் நிரந்தரம் செய்யப்படுவர் என்று சட்டசபையில் அறிவித்தார். ஆனால், அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படாத நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தற்போது, தி.மு.க., ஆட்சியில் அமைச்சர் சேகர்பாபு, கமிஷனர் குமரகுருபரன் ஆகியோர் பொறுப்பேற்ற பின், அறநிலையத் துறைபுத்துயிர் பெற்றது. கோவில் சொத்துக்கள் மீட்பு, அர்ச்சகர் பணி நியமனம், திருப்பணிகளில் வேகம், கோவில்களின் வருவாய் பெருக்கம் என, பல்வேறு அதிரடி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
செயல் பாபு: சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் வசதிக்காக, ஏராளமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பல ஆண்டு காலமாக அவப்பெயர் சுமந்து வந்த அறநிலையத் துறை, தற்போது, அனைத்து தரப்பினரும் வியக்கும் வகையில் விளங்குகிறது.தினம் ஒரு கோவிலில் ஆய்வு என பம்பரமாக சுழன்று வரும் அமைச்சர் சேகர்பாபுவின் செயல்பாடுகளை பார்த்த, முதல்வர் ஸ்டாலின், அவரை, செயல் பாபு என்று அழைத்து பெருமை சேர்த்தார். அறநிலையத் துறையை தலை நிமிரச்செய்த அமைச்சர், கோவில் தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்வதிலும் வேகம் காட்ட வேண்டும் என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கோவில்களில், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய, தற்காலிக பணியாளர்களின் விவரம் பெற்று, பணி நிரந்தரம் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று ஜூலை மாதம் அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.இது தவிர, காலியாக உள்ள பணியிடங்களும் கண்டறியப்பட்டு நிரப்பப்படும். கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.தன் அறிவிப்புக்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வரும் அமைச்சர், கோவில் பணியாளர்கள் நிரந்தரம் செய்யும் திட்டத்தை, விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பது, ஒட்டுமொத்த தற்காலிக பணியாளர்களின் எதிர்பார்பாக உள்ளது. - நமது நிருபர்-