காஞ்சி மஹாபெரியவரின் ஞாபக சக்தி பற்றி வியக்காதவர்களே இல்லை. பொதுவாக வயதான பிறகு ஞாபக சக்தி குறையும் என்பார்கள். ஆனால் வயதான காலத்திலும் சுவாமிகளின் நினைவாற்றல் சிறப்பாக இருந்தது. பல வருடங்களுக்கு முன் சந்தித்தவரைக் கூட ஞாபகப்படுத்தி பெயர் சொல்லி அழைத்து நலம் விசாரிப்பது அவரது இயல்பு. அப்படித்தான் அன்றைய தினம் வயதான ஒரு தம்பதி காஞ்சிபுரத்திற்கு தரிசனத்திற்காக வந்தனர். அவர்களைக் கூர்ந்து பார்த்து விட்டு, ‘‘என்ன சபேசா...சவுக்கியமாக இருக்கிறாயா? உன் பார்யாள்(மனைவி) பங்கஜலட்சுமி தானே.. ஏம்மா...நீயும் சவுக்கியம் தானே’’ எனக் கேட்டதும் அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ‘‘உங்கள் பையன் சுவாமிநாதனை நான் பார்த்தபோது வயது ஐந்து இருக்கும். இப்போது நாற்பது வயதாகியிருக்குமே... என்ன செய்து கொண்டிருக்கிறான்’’ என விசாரித்தார். ‘‘ சுவாமிகள் ஆசீர்வாதத்தால் அவன் பம்பாயில் (மும்பை) ஆடிட்டராக இருக்கிறான்’’ என்றனர். ‘‘அவன் ஒரே பையன் தானே உங்களுக்கு...அவனுக்குக் கல்யாணம் ஆகியிருக்குமே...எத்தனை குழந்தைகள்’’ ‘‘ இரண்டு பையன்கள். இரண்டு பேரும் பள்ளியில் படிக்கிறார்கள்’’ ‘‘அதுசரி. முப்பத்தைந்து வருஷத்துக்கு முன்பு உங்கள் வீட்டில் நான் பிட்சை ஏற்ற போது, உங்கள் வீட்டு வாசலில் பெரிய வேப்ப மரம் இருந்ததே, இப்போதும் அது இருக்கிறதல்லவா...வெட்டவில்லையே’’ எனக் கேட்டார். அவர்களும் பரவசத்தோடு, ‘‘மரம் அப்படியே தான் இருக்கிறது, வீட்டைத் தான் கொஞ்சம் மாற்றிக் கட்டியிருக்கிறோம்’’ என்றனர். ‘‘ நான் வந்தபோது வீட்டில் பசு இருந்ததே... வீட்டை மாற்றிக் கட்டினாலும் இப்போதும் மாட்டுக் கொட்டகை இருக்கிறதா? முன்பு போலவே மாட்டை பராமரிக்கிறீர்களா’’ ‘‘இப்போதும் மாட்டுக் கொட்டகை இருக்கிறது. பசுக்களை பராமரித்து வருகிறோம்’’ ‘‘பசு இருக்குமிடத்தில் மகாலட்சுமி வாசம் செய்வாள். பசுவை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள்’’ என்று தீர்த்தப் பிரசாதம் கொடுத்தார். தம்பதியின் கன்னங்களில் கண்ணீர் வழிந்தது. சுவாமிகளின் ஞாபகசக்தி அவர்களை உருக்கியது. ‘‘உங்களின் அபார ஞாபக சக்தி பிரமிக்க வைக்கிறது’’ என வியந்தனர். கனிவுடன் பார்த்தபடி ‘‘ பகவானின் ஞாபகம் அல்லவா நம் மனதில் எப்போதும் இருக்க வேண்டும்? அதற்காக நாளும் முயற்சி செய்து நம்மை பழக்கப்படுத்த வேண்டும், ஞாபக சக்தியின் பெரிய பிரயோஜனமே அதுதான்’’ என விளக்கம் அளித்தார். சம்மதம் தெரிவிக்கும் விதத்தில் அவர்கள் இருவரும் தலையசைத்தபடி சுவாமிகளை வணங்கினர்.