பதிவு செய்த நாள்
12
அக்
2021
07:10
* வேதாரண்யம் சிவன் கோயிலில் வீணை இல்லாத சரஸ்வதி சன்னதி உள்ளது. இங்குள்ள அம்மனின் குரல் இனிமையை சரஸ்வதி கேட்டு வெட்கப்பட்டதால் வீணை இசைப்பதை மறந்தாள்.
* ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் பிரம்மா கோயிலில் வீணை இல்லாத சரஸ்வதியை தரிசிக்கலாம்.
* சரஸ்வதியின் பிறந்த நட்சத்திரம் மூலம். சொல்லின் செல்வன் என போற்றப்படும் அனுமனும் இதே நட்சத்திரம் தான்.
* அன்ன வாகன சரஸ்வதியை ‘ஹம்ச வாகினி’ என்றும் மயிலில் இருக்கும் சரஸ்வதியை ‘மயூர வாகினி’ என்றும் அழைப்பர்.
* பிரம்மாவின் நாவில் சரஸ்வதி குடியிருக்கிறாள். இதனால் ‘நாமகள், வாக்தேவி’ எனப்படுகிறாள்.
* ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணியில் ‘நாமகள் இலம்பகம்’ என்னும் பகுதி உள்ளது.
* தட்சிணாமூர்த்தி, சரஸ்வதியை வழிபட்டால் ஞானம் கிடைக்கும். ஞானத்தின் அடையாளமாக இருவரும் கையில் ஸ்படிகமாலை வைத்திருப்பர்.
* சப்தமாதர் என்னும் ஏழு பெண் தெய்வங்களில் சரஸ்வதியை ‘பிராம்மி’ என அழைப்பர்.
* சரஸ்வதி அந்தாதியைப் பாடியவர் கம்பர். இவருக்காக கிழங்கு விற்கும் பெண்ணாக வந்து சரஸ்வதி உதவி செய்தாள்.
* பிரம்மாவின் மனைவியான சரஸ்வதி சத்திய லோகத்தில் வாசம் செய்கிறாள்.
* ஒட்டக்கூத்தர் எழுதிய தக்கயாகப் பரணி என்னும் நுாலில் சரஸ்வதி மீது வாழ்த்து பாடல் உள்ளது.
* பாலித்தீவிலுள்ள தம்பாக் ஸைரிங் குளத்தில் விஜயதசமியன்று பக்தர்கள் புனித நீராடுவர். இங்கு சரஸ்வதியின் வாகனமான அன்னத்தை மஞ்சள் நிறத்தில் வடிக்கின்றனர்.
* சரஸ் என்பதற்கு நீர், ஒளி என்பது பொருள். சரஸ்வதிக்குரிய திதி வளர்பிறை நவமி. புரட்டாசியில் சரஸ்வதி பூஜையன்று வருவது மகாநவமி எனப்படும்.
* திருவாரூர் மாவட்டம் கூத்தனுார் கோயிலில், ‘மலரியைச் சேர்ந்த கவிச்சக்கரவர்த்தியின் பேரனார் ஆகிய ஓவாத கூத்தர் சரஸ்வதிக்கு கோயில் கட்டினார்’ எனக் கல்வெட்டு உள்ளது. ஒட்டக்கூத்தரின் பேரர் ஓவாத கூத்தர் இக்கோயிலைக் கட்டினார்.
* கும்பகோணத்தில் இருந்து வேப்பத்துார், கஞ்சனுார் வழியாக குத்தாலம் சாலையில் 18 கி.மீ., துாரத்தில் உள்ளது திருக்கோடிக்காவல். இங்குள்ள கோயிலில் சரஸ்வதி, விநாயகருக்கு தீபம் ஏற்ற பக்தர் ஒருவர் வழக்கத்திற்கு மாறாக பொன் தானம் அளித்த செய்தி கல்வெட்டில் உள்ளது.
* சரஸ்வதி அருளால் மகாபாரதம், பிரம்ம சூத்திரம், பதினெட்டு புராணங்களை எழுதியவர் வேத வியாசர். இவற்றை ‘மானா’ என்ற குகையில் தங்கியிருந்து அவர் எழுதினார். ஓலைச்சுவடிகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கியது போல இந்த குகை காட்சியளிக்கும். இந்த குகையை ‘வியாச புஸ்தக்’ (வியாச புத்தகம்) என்பர்.
* சரஸ்வதி பற்றி குமரகுருபரர் பாடிய பாடல் சகலகலாவல்லி மாலை.
* கர்நாடக மாநிலம் சிருங்கேரியில் உள்ள சரஸ்வதியின் பெயர் சாரதாம்பாள்.
* மணிமேகலை காப்பியத்தில் ‘சிந்தாதேவி’ என சரஸ்வதி குறிப்பிடப்படுகிறாள்.
* அரசு வழங்கும் ஞானபீடம் என்னும் விருதில் இடம் பெறும் சின்னம் வாக்தேவி (சரஸ்வதி)
* ராமானுஜருக்கு சரஸ்வதியால் வழங்கப்பட்ட பட்டம் பாஷ்யக்காரர் (சிறந்த உரையாசிரியர்)
* சரஸ்வதிக்குரிய திதி நவமி. நட்சத்திரம் மூலம்
* மயில் வாகன சரஸ்வதியை வடிவமைத்த ஓவியர் ரவிவர்மா.
* பேச்சுக் கலைக்கு அதிபதி என்பதால் சரஸ்வதியை வாக்தேவி என்பர்.
* நம் நாக்கில் குடியிருப்பதால் சரஸ்வதிக்கு நாமகள் எனப்படுகிறாள்.
* எல்லா உயிர்களின் நாக்கிலும் சரஸ்வதி குடியிருப்பதாக கந்தபுராணம் கூறுகிறது.
* மகா சரஸ்வதி, ஆர்ய சரஸ்வதி, வஜ்ரவீணா சரஸ்வதி, வஜ்ர சாரதா, வஜ்ர சரஸ்வதி என ஐந்து சரஸ்வதிகளை பவுத்தர்கள் வழிபடுகின்றனர்.
* சமயம் கடந்த தெய்வம் என்று சரஸ்வதியை போற்றுபவர் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத ஐயர்.
* சரஸ்வதியின் கையில் உள்ள ஜபமாலைக்கு ‘அட்சமாலை’ என்று பெயர். இதில் 51 மணிகள் இருக்கும்.
* சரஸ்வதி அந்தாதி எனும் பாடலை எழுதியவர் கம்பர்.
* திபெத், நேபாளம், இந்தோனேசியா, ஜப்பான் நாடுகளில் சரஸ்வதி வழிபாடு உள்ளது.