சூலூர்: சூலூர் வட்டார கோவில்களில் விஜய தசமி விழா பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
சூலூர், கருமத்தம்பட்டி, சோமனூர் பகுதிகளில் உள்ள கோவில்களில் விஜய தசமி விழா நேற்று நடந்தது. சூலூர் சிவன் கோவில், பெருமாள் கோவில், கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவில்களில் விஜய தசமியை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. காடாம்பாடி ராஜலிங்கம் நகரில் உள்ள சாந்த சிவ காளியம்மன் கோவிலில், விஜய தசமியை ஒட்டி, மகிஷாசுர மர்த்தினி வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர். குழந்தைகளுக்கு நோட்டுகள், பேனா, பென்சில்கள் வழங்கப்பட்டன. சோமனூர் சேடபாளையம் ரோட்டில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் விஜய தசமி விழா நடந்தது. நேற்று காலை, 108 மூலிகை திரவியங்களை கொண்டு அம்மனுக்கு அபிஷேக பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். சக்தி அழைக்கும் போது, பக்தர்கள் கத்தி போட்டு, அம்மனை அழைத்தனர். மாலை அம்மன் திருவீதி உலா நடந்தது. பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.