பதிவு செய்த நாள்
29
ஜூன்
2012
05:06
சுவாமிஜியும் கேத்ரி பயணமானார். அங்கே, மகராஜா அவரை நீண்ட காலம் பழகிய நண்பரைப் போல நடத்தினார். அவர் கேட்ட கேள்விகளுக்கு சுவாமிஜி, மிக அருமையாக பதில் சொன்னார். வாழ்க்கை என்றால் என்ன ? என்ற மகாராஜாவின் கேள்விக்கு, ஒரு ஜீவன் தன்னை அழித்து வைக்க முயலும் சூழ்நிலைகளில் இருந்து தன்னை விளங்கிக்கொள்வதும், அதிலிருந்து விடுபடுவதுமே வாழ்க்கை, என்றார் சுவாமிஜி, கல்வி என்றால் என்ன ? என்ற அடுத்த கேள்விக்கு, எந்த கருத்து ஒருவனது நரம்பு மண்டலத்தில் ஊறிப்போகிறதோ அதுவே கல்வி. என்றார் சுவாமிஜி. சட்டத்தை பற்றி மகாராஜா கேட்ட கேள்விக்கு, ஒருவனது உள்ளம் அவனுக்குள் இயற்றும் விதிமுறைகளே சட்டம். அதை வெளியில் இருந்து உருவாக்க முடியாது. அறிவும், அனுபவமுமே சட்டத்தை உருவாக்கும்.
கேத்ரியில் அவர் ஒருநாள் பயணம் செய்தபோது, ஏராளமான மக்கள் அவரை சந்தித்தனர். தொடர்ந்து மூன்றுநாட்கள் சாப்பிடவோ, தூங்கவோ செய்யாமல் ஒருநிமிட ஓய்வு கூட இல்லாமல், சுவாமிஜி அவர்களிடையே பேசிக் கொண்டே இருந்தார். வந்தவர்களும், சுவாமிஜி சாப்பிடாதது பற்றி கூட கண்டுகொள்ளவில்லை. மூன்றாம் நாள், எல்லோரும் சென்றபிறகு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் ஓடி வந்தார். அவர் மிகவும் ஏழை. சுவாமிஜியிடம், சுவாமி ! தாங்கள் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து பக்தர்களிடையே பேசிக்கொண்டிருந்தீர்கள். ஒரு பருக்கை கூட உங்கள் வாயில் படவில்லை. நீங்கள் சாப்பிடாமல் இருப்பது எனக்கு வருத்தத்தை தருகிறது, என்றார். அப்போதுதான், சுவாமிஜி நான் சாப்பிட உன்னிடம் இருக்கும் எதையாவது தருவாயா ? என சுவாமிஜி கேட்டவுடன் அந்த எழை அதிர்ந்து போனார். உங்களுக்கு உணவளிக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால், தாழ்ந்த குலத்தினான நான் செய்த உணவை உங்களுக்கு எப்படி அளிக்க முடியும் ? என்றதும், சுவாமிஜி பரவாயில்லை ! நீ தயாரித்த சப்பாத்திகளையே எனக்கு கொடு. நான் சாப்பிடுகிறேன் என்றார்.
அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் பொங்க அந்த ஏழை நடுங்கினார். மகாராஜாவுக்கு தெரிந்தால் தன்னை தொலைத்து விடுவாரே என்று பயந்தார். இருந்தாலும், சுதாரித்துக்கொண்டு, இந்த துறவிக்கு உணவளிப்பதால் எனக்கு தண்டனை கிடைக்குமானால், அதை ஏற்றுக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். என சிந்தித்தபடியே சுவாமிஜிக்கு உணவளித்தார். சுவாமிஜி இது பற்றி கூறும் போது, தேவாதிதேவனாகிய இந்திரன் எனக்கு ஒரு தங்கக் கோப்பையில் அமிர்தத்தை கொண்டு வந்து கொடுத்திருந்தால் கூட, நான் இவ்வளவு ருசித்து சாப்பிட்டிருக்க மாட்டேன். அந்த ஏழை தந்த உணவில் அன்பு கலந்திருந்தது. இப்படிப்பட்ட ஏழைகளை தீண்டத்தகாதவர்கள் என இந்த உலகம் ஒதுக்கி வைத்திருக்கிறதே என வருத்தப்படுகிறேன், என்றார். அந்த ஏழையின் செயலை பற்றி ஒரு சமயம் மகாராஜாவிடம் கூறினார். மகாராஜா அந்த ஏழையை அழைத்து வர ஆள் அனுப்பினார்.
தாழ்த்தப்பட்ட அந்த ஏழை நடுநடுங்கியபடியே, மகாராஜா முன் வந்து நின்றார். இதன்பிறகு பல இடங்களைச் சுற்றி தென்னிந்தியாவுக்கு வந்தார் சுவாமிஜி. மைசூர் மகாராஜா அவரது அன்பைப் பெற்றார். ஒருமுறை அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது சுவாமிஜி அவரிடம், இந்தியா ஆன்மிகத்திலும், தத்துவத்திலும் செல்வம் படைத்திருக்கிறது. ஆனால், விஞ்ஞானத்திலும், பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கியதருக்கிறது. எனவே, நம் ஆன்மிகத்தையும், தத்துவத்தையும் மேலை நாட்டவருக்கு கொடுத்து, அவர்களிடமுள்ள பொருளை நாம் பெற வேண்டும். இதற்காக சிகாகோவில் (அமெரிக்க நகரம்) நடக்கும் சர்வமத மகாசபை கூட்டத்திற்கு செல்ல வேண்டும், என்றார். மகாராஜா இந்தக் கருத்தை ஏற்கிறேன் நீங்கள் சிகாகோ செல்லும் பொறுப்பை நான் ஏற்கிறேன் என்றார் மகாராஜா. ஆனாலும், சுவாமிஜி அந்த உதவியை பெற்றுக்கொள்ளவில்லை. சமயம் வரும்போது பெற்றுக் கொள்வதாகச் சொல்லி விட்டார். மைசூரில் இருந்து அவர் திருவனந்தபுரம் வந்தார். அங்கு இளவரசர் மார்த்தாண்டவர்மனின் ஆசிரியராக இருந்த சுந்தரராம அய்யரின் வீட்டில் தங்கினார். பல விஷயங்களை பற்றி அவர்கள் பேசினர்.
சுவாமிஜி அவரிடம், எல்லா சாதியைச் சேர்ந்தவர்களும் சமஸ்கிருதம் படிக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். பெண்களும் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும். சமஸ்கிருதம் தெரிந்தால், தங்கள் பிரச்சனைகளைத் தீர்த்து கொள்ளும் திறனை அவர்கள் அடைவார்கள் என்றார். திருவனந்தபுரத்துக்கு வங்காளத்தில் இருந்து மன்மத பட்டாச்சாரியார் என்பவர் வந்திருந்தார். இவர், சுவாமிஜியின் பள்ளி, கல்லூரி தோழர். அவர் தங்கியிருந்த இடத்திலேயே சுவாமிஜி தங்கினார். இது பற்றி சுந்தரராம அய்யர் சுவாமிஜியிடம் மிகவும் குறைபட்டுக் கொண்டார். சுவாமிஜி அவரிடம், நாங்கள் வங்காளிகள். மாமிசம் சாப்பிடுவோம். தென்னக பிராமணர்கள் மீன் கூட சாப்பிடுவதில்லை. எனக்கு பிடித்த உணவைச் சாப்பிட அவர் வீட்டில் தங்குகிறேன், என்றார். புலால் உணவு பற்றி சுவாமிஜி குறிப்பிடும் போது, புராண காலத்தில் நாம் அனைவருமே மாமிசம் சாப்பிட்டு வந்தோம். புத்த மதத்தினர் இந்தியாவில் புகுந்த பிறகு தான் இதில் மாற்றம் ஏற்பட்டது. மாமிச உணவை விட்டுவிட்டதால், இந்தியா பலவீனமாகி விட்டது.
நாம் பிரிட்டிஷ்காரர்களுக்கு அடங்கியிருந்தாலும் சரி, அவர்களிடமிருந்து விடுதலை பெற்றாலும் சரி, மாமிச உணவை நாம் சாப்பிட வேண்டும். அப்படியானால் தான் பாரதம் சக்திமிக்கதாக திகழும், என்றார், அய்யர் இதை ஒப்புக்கொள்ளவில்லை அவர் அகிம்சாவாதத்தில் பிடியாக நின்றார். இருவரும் தங்கள் தரப்பை கடைசி வரை மாற்றிக் கொள்ளவில்லை. ஒருமுறை சுந்தரராம அய்யர், சுவாமியிடம் நீங்கள் சிகாகோ போவதாகச் சொல்கிறீர்களே ! இதெப்படி சாத்தியம் ? என்றார். இறைவனின் விருப்பப்படியே எதுவும் நிகழ்கிறது. நான் சிகாகோ போவது அவனது விருப்பமென்றால் அதை எந்த சக்தியாலும் தடுக்க இயலாது, என்றார். சுவாமி ! இதுபோன்ற விஷயங்களை ஆண்டவன் நிச்சயிப்பான் என்பதை நான் நம்ப மாட்டேன் என்றார் அய்யர். அவ்வளவு தான் சுவாமிஜிக்கு கடும் கோபம் வந்து விட்டது.