பதிவு செய்த நாள்
29
ஜூன்
2012
05:06
மிஸ்டர் அய்யர், நீங்கள் ஆசாரத்தில் கெட்டிக்காரர். ஆனால்<, உள்ளத்தளவில் ஒரு கடவுள் எதிர்பாளராகவே இருக்கிறீர்கள். ஆண்டவனால் தான் எதையும் நிர்ணயிக்க முடியும், இறைவனின் கருணைக்கும், செயல்பாடுகளுக்கும் எல்லை காண முயற்ச்சிக்கிறீர்கள், என பொரிந்து தள்ளி விட்டார். அய்யர் அரண்டு விட்டார். அதே நேரம் சுவாமியின் அளப்பரிய கலப்படமில்லாத பக்தி அவரைக் கவர்ந்து விட்டது. சுவாமிஜி, அவரது வீட்டில் இருந்து கிளம்பியதும், ஏதோ ஒரு ஒளி தங்கள் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டது போல உணர்ந்தார் சுந்தரராம அய்யர். திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்ட சுவாமி ராமேஸ்வரம் புறப்பட்டார். வழியில் மதுரையில், ராமநாதபுரம் அரசர் பாஸ்கர சேதுபதியை சந்தித்து உரையாடினார். பின்னர் ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமியை தரிசித்தார். ராமேஸ்வரத்தை தரிசிக்க வேண்டும் என நீண்ட நாளாக என் மனதில் நினைத்திருந்தேன் என்றார் அவர். அங்கிருந்து புறப்பட்டு கன்னியாகுமரியை அடைந்தார். இங்கு வந்து பகவதி அம்மன் கோயிலைக் கண்டு பரவசப்பட்டார்.
இமயத்தில் பிறந்த அம்பிகை, இந்த தென் கோடியை தன் உறைவிடமாகக் கொண்டாளோ என நினைத்தார். முக்கடலும் சங்கமிக்கும் அந்த புண்ணியபூமியில் விழுந்து வணங்கினார். அவருக்கு தனிமையில் அமர்ந்து இந்த தேசத்தின் நிலையைப் பற்றி சந்திக்க ஆசை ஏற்பட்டது. கரையில் அமர்ந்து சிந்திப்பதென்றால், யாராவது வந்து தொந்தரவு செய்து கொண்டே இருப்பார்கள். அந்த மகான், கடலுக்குள் சற்று தூரத்தில் இருந்த பாறையைப் பார்த்தார். படகோட்டிகளின் துணையை அவர் நாடவில்லை. கடலுக்குள் குதித்தார். படபடவென நீந்தினார். பாறையில் ஏறினார். தியானத்தில் அமர்ந்து விட்டார். அலைகள் அடித்த தூவானம் அவருக்கு சிலிர்பை ஏற்படுத்தியது. அவரது கண்களில் பாரதத்தாய் தெரிந்தாள். அவள் வாடிப் போய் படுத்திருந்தாள். இந்த உலகத்தையும், அதில் வாழும் ஒவ்வொரு மனிதனையும் தன் இடம் போலவும், தன்னைப் போலவும் பாவிக்க வேண்டும் என்று சொல்லும் இந்துமதம் மக்களுக்கு உத்வேகமளிக்க வேண்டும் என்ற ஞானம் அவருக்குள் பிறந்தது.
உலகெங்கும் இந்து மதக்கருத்துகள் பரப்பப்பட வேண்டும் என்பதை அவர் உணர்ந்து விட்டார். ஆனால், இந்துக்களே இந்து மதத்தைப் புரிந்து கொள்ளாத வேதனையே பாரதத்தாயின் வருந்திப் படுத்திருப்பதற்கு காரணம் என்று புரிந்து விட்டது. இந்த நாட்டின் வரலாறு சீர்கேடு அடைய இந்துமத எழுச்சியின்மையே காரணம் என்பதை உணர்ந்தார். மேல்நாட்டு நாகரீகத்தை கடை பிடித்ததால்தான் இந்தியா சீரழிந்து கிடக்கிறது என்பதையும், இதில் மாற்றம் பெறவேண்டுமானால், முனிவர்கள் வாழ்ந்த பழைய இந்திய வாழ்வு வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டார். அதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட கன்னியாகுமரி தலமே அவருக்கு பாதை காட்டியது. இங்குதான் அமெரிக்கா போக வேண்டும் என்ற விருப்பம் அவருக்குள் ஏற்பட்டது. ஆம், சர்வமத மகாசபைக்கு போக வேண்டும். அங்கே மதத்தின் பெருமையை எடுத்துச் சொல்ல வேண்டும் அப்போது தான் உலகம் இந்து மதத்தின் மேன்மையைப் புரிந்து கொள்ளும் என்று நம்பினார். மக்களுக்கு நிரந்தரமாக ஆன்மிக உணர்வை ஊட்டும் வகையில், அங்குள்ள பெரியவர்களிடம் பொருள்களை பெற்று வந்து, ராமகிருஷ்ணரின் பெயரால் ஒரு மடம் நிறுவ வேண்டும் என்பது அவரது குறிக்கோளாயிற்று. சிகாகோ செல்ல வேண்டுமானால் பணம் வேண்டும்.
கேத்ரி மன்னன் போன்றவர்கள் நினைத்தால் பணம் கொடுத்து விட முடியும். ஆனால், சுவாமிஜியின் எண்ணம் வேறு மாதிரியாக இருந்தது. இந்த நாட்டிலுள்ள ஏழைகள் இதர மக்கள் முன் வர வேண்டும். அவர்களிடமே ஆன்மிக உணர்வு பெருக வேண்டும். அவர்கள் கொடுக்கும் தொகையில் அமெரிக்கா செல்ல வேண்டும். இதற்காக மக்களிடம் நன்கொடை பெற வேண்டும் என நினைத்தார். அழகிய சிங்கபெருமாள் எனப்பட்ட அளசிங்கா என்ற ஆசிரியர் தலைமையில் உலகமெங்கும் நன்கொடை வேட்டை நடந்தது. 1893 மார்ச், ஏப்ரல் இந்த இரண்டு மாதங்களில் மட்டும் தமிழகம் சுவாமிஜிக்கு கொடுத்த தொகை 3 ஆயிரம் ருபாய். இப்படி ஒரு தொகை பெறுமென்று சுவாமிஜியே எதிர்பார்க்கவில்லை. தமிழக இளைஞர்களைக் கண்டு ஆச்சரியப்பட்டார். அதே போல் நாடெங்கும் நிதி வசூலானது. அமெரிக்கா செல்லும் முன் அன்னை சாரதாதேவியாருக்கு கடிதம் எழுதி ஒப்புதல் பெற்றார். 1893 மே 31ல் சுவாமிஜி மும்பையில் இருந்து சிககோவுக்கு கப்பல் ஏற முடிவானது. இதனிடையே கேத்ரி மன்னருக்கு குழந்தை பிறந்தது. சுவாமிஜியின் ஆசி பெற்றதால் தான் தனக்கு குழந்தை பிறந்ததாக நம்பிய மன்னர், குழந்தையின் பிறந்தநாள் விழாவுக்கு வரவேண்டும் எனு வேண்டுகோள் விடுத்தார். சுவாமிஜிக்கு சிகாகோ புறப்படும் பணி இருந்தாலும், மகராஜாவின் பணிவின் காரணமாக அங்கே சென்று குழந்தையை வாழ்த்தினார். இங்கே விவேகானந்தரின் மனதை நெகிழச்செய்யும் ஒரு சம்பவம் நடந்தது.
மகாராஜா ஒரு நாட்டியத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். விவேகானந்தருக்கு அழைப்பு விடுத்தார். சன்னியாசியான தன்னால் இதில் கலந்து கொள்ள முடியாது என கண்டிப்பாக மறுத்துவிட்டார் சுவாமிஜி. இதைக் கேள்விப்பட்ட நாட்டியப்பெண் மிகவும் வருந்தினாள். சுவாமிஜியைக் காண கொடுத்து வைக்கவில்லையே என வருந்தினாள். தன் வருத்தத்தை பாடலாக வெளிப்படுத்தினாள். தன் அறையில் அவர் இருந்த போது, நாட்டியப் பெண் பாடும் பாடலோசை அவரது காதில் கேட்டது. அவள் பின்வரும் பொருளில் ஒரு பாடலைப் பாடினாள். இறைவா ! நான் பாவிதான். பாவி என்பதற்காக என்னை ஒதுக்கித் தள்ளலாமா ? பாவத்தை துடைப்பது தானே உன் வேலை. பாவத்தை ஏற்று ஏற்று உனக்கு பாவம் என்ற திருநாமம் கூட ஏற்பட்டதே ? நான் சாக்கடை தான். சாக்கடை நீர் கங்கையில் கலந்தபிறகு, அதை சாக்கடை என்று யாராவது சொல்கிறார்களா ? ஆனாலும், என்னை ஏன் புறந்தள்ளினாய்? இந்த கருத்துமிக்க பாட்டு, சுவாமிஜியை உலுக்கிவிட்டது. பாவியோ, புண்ணியனோ யாராயிருந்தால் என்ன, மனஉறுதி உடைய ஒருவன், அதிலும் எல்லா உயிர்களையும் சமமாக பாவிக்க வேண்டும் என்ற இந்து தர்மத்தை உலகெங்கும் பரப்ப போகிற ஒருவன், இதற்காக சிகாகோ வரை போகப் போகிறவன்...நாம் அவளது நாட்டியத்தில் கலந்து கொண்டிருக்க வேண்டும். பாவிகள், புண்ணியஸ்தர்கள், ஆண், பெண், குடும்பப் பாகுபாடு எப்படி ஏற்பட்டது ! சுவாமிஜி வெட்கத்தில் உறைந்து போனார்.