பதிவு செய்த நாள்
29
ஜூன்
2012
05:06
அதைத் தவிர்க்க முடியாமல் அந்த மக்களுடன் புறப்பட்டார் சுவாமிஜி. குறிப்பிட்ட தூரம் வரை அவரை ஒரு மாட்டு வண்டியில் ஏறிக்கொள்ளச் சொன்னதையும், அவரால் தட்டிக்கழிக்க முடியவில்லை, அவர்கள் நாராயணனின் சகோதரியாகக் கருதப்படும் நாராயணி போன்ற அம்பிகையின் கோயில் இருக்கும் நாராயண்சோதரி கிராமத்திற்கு வந்தனர். அந்த ஆலயத்தில் தங்கினர். அதுவரை தன்னுடன் வந்த மக்களை அனுமதித்த சுவாமிஜி, அவர்களை வழியனுப்பினார். பிரியாவிடை பெற்றனர் அவர்கள். பின்னர் 16 மைல் தனித்தே நடத்த சுவாமிஜி, போஸோவே என்ற ஊரை அடைந்தார். அங்கிருந்து ரயிலில் ஜெய்ப்பூர் சென்றார். அந்தப் பெட்டியில், இரண்டு வெள்ளைக்காரர்கள் இருந்தனர். அவர்கள் சுவாமிஜியின் கோலத்தை கேலி செய்து கொண்டிருந்தனர், சுவாமிஜிக்கு ஆங்கிலம் தெரியாது என்ற எண்ணத்தில் அவர்கள் கேலி செய்ததை சுவாமி கண்டு கொள்ளவில்லை. ஒரு ஸ்டேஷனின் மாஸ்டரிடம் மாஸ்டர், ஐ ஆம் வெரி தார்ஸ்டி, பிளீஸ் பிரிங் சம் வாட்டர் என ஆங்கிலத்தில் சொல்லவும் அதிர்ந்து போனார்கள் ஆங்கிலேயர்கள்.
வண்டி கிளம்பியதும், நாங்கள் இவ்வளவு நேரம் உங்களை கேலி செய்ததது தெரிந்தும், எப்படி அமைதியாக இருந்தீர்கள் ? என்று அவர்கள் கேட்கவும், நான் முட்டாள்களைப் பார்ப்பது இது முதல் முறையல்ல என்றார் சுவாமிஜி மிக அருமையாக. அந்த ஆசாமிகளுக்கு கோபம் வந்து விட்டது. அவர்கள் வரிந்து கட்டிக் கொண்டு சுவாமிஜியை தாக்க முயல, பதிலுக்கு சுவாமிஜி தன் கைமுஷ்டிகளை தூக்கிக் கொண்டு சண்டைக்கு தயாராக அவர்கள் அடங்கி ஒடுங்கி உட்கார்ந்து விட்டனர். ஜெய்ப்பூரை அடைந்த சுவாமிஜி அங்கே இரண்டு வாரம் தங்கினார். அவ்வூரில் சமஸ்கிருத இலக்கண பண்டிதர் ஒருவர் இருந்தார். அவரிடம், இலக்கணம் கற்றார் சுவாமிஜி. அந்த பண்டிதர் மெத்தப்படித்தவர் என்றாலும், பிறருக்கு சொல்லிக் கொடுக்கும் அளவு திறமை பெற்றிருக்கவில்லை. குறிப்பாக பதஞ்சலி முனிவர் அருளியிருந்த மஹாபாஷ்யம் என்ற நூலிலுள்ள முதல் சூத்திரத்தையே மூன்றுநாளாக முயன்றும் சரியாக விளக்க முடியவில்லை. அவர் சுவாமிஜியிடம், தங்களுக்கு புரியுமளவும், பயன்தரும் வகையிலும் என்னால் விளக்க முடியவில்லையே, என ஒத்துக் கொண்டார்.
சுவாமிஜி அவரிடம் அந்த புத்தகத்தை மட்டும் கேட்டு வாங்கினார். மூன்றே நாட்களில் முடித்து விட்டார். பண்டிதர் அவரைக் காணச் சென்ற போது, பாஷ்யம் முழுமைக்கும் மிக எளிமையாக பொருள் சொன்னார். பண்டிதர் அசந்து விட்டார். இதுபற்றி அவர் கூறும்போது உள்ளத்தில் தீவிரமான ஆர்வம் இருக்குமானால், எதையுமே சாதித்து விடலாம். மலைகளையும் அணுகளாகப் பொடித்து விடலாம் என்றார். புரியவில்லை என்று காரணம் காட்டி பாடங்களை ஒதுக்கும் மாணவர்கள் விவேகானந்தரை தங்கள் முதன்மை குருவாகக் கருத வேண்டும். அவரது இந்த வார்த்தைகளை வாழ்வின் தாரக மந்திரமாக்கிக் கொள்ள வேண்டும். ஜெய்ப்பூரில் மற்றொரு அதிசயத்தையும் நிகழ்த்தினர் சுவாமிஜி. ஜெய்ப்பூர் சமஸ்தான சேனாதிபதி சர்தார் ஹரிசிங் என்பவருக்கு உருவ வழிபாட்டில் நம்பிக்கையில்லை. தெய்வம் நிர்குணமானது என்றே சொல்லி வந்தார். அவருக்கு உருவ வழிபாட்டின் முக்கியத்துவத்தை பற்றி சுவாமிஜி சொன்னது ஒப்புக் கொள்ளும் வகையில் இல்லை. ஒருமுறை அவர்கள் தெருவில் நடந்து கொண்டிருந்த போது ராதா கிருஷ்ணர் ஊர்வலம் நடந்தது. அந்த சிலையை உற்று நோக்கிய சுவாமிஜி அவரைத் தொட்டு, சர்தார் அதோ அந்தச்சிலையைப் பாருங்கள் என்றார். சிலை கண்திறந்து தன்னை பார்த்தது போன்ற பிரமை சர்தாருக்கு ஏற்பட்டது.
சுவாமிஜி ! தெய்வத்திற்கு உருவமிருக்கிறது. இதை நான் ஒப்புக்கொள்கிறேன் என்றார். ராமகிருஷ்ணர் விவேகாநந்தரை முதன்முதலாக தொட்ட போது, எந்த நிலையை அவர் அடைந்தாரோ, அதே நிலையை சர்தார்ஜிக்கு சுவாமிஜியால் தர முடிந்தது. பின்பு சுவாமிஜி மவுண்ட் அபு எனப்படும் மலைப்பிரதேசமான அபுமலைக்குச் சென்றார். அங்குள்ள ஒரு குகையில் தங்கி தவத்தில் ஈடுபட்டார். அந்தக் குகை வழியாக ஒரு வக்கீல் சென்று வருவார். இஸ்லாமியரான அவர் சுவாமிஜியை சந்தித்தார். பல விஷயங்கள் பேசினார். சுவாமிஜியின் ஆன்மிக வாசனை வக்கீலை மிகவும் ஈர்த்துவிட்டது. அவர், சுவாமிஜியை தன் வீட்டில் வந்து தங்கும்படி கேட்டார். சுவாமிஜியும் ஒப்புக்கொண்டார். அவர் சுவாமிஜியிடம், நான் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவன் என்பதால், தங்களுக்கு தனியாக சமைக்கச் சொல்கிறேன் என்றார். சுவாமிஜி மறுத்துவிட்டார். இதுகேட்டு நெகிழ்ந்து போனார் வக்கீல். அந்த வக்கீல், வீட்டில் தனித்தே இருந்தார். அவரைக் காண பல சமஸ்தானங்களின் அதிகாரிகள் வந்தனர். அவர்கள் சுவாமிஜியுடன் நீண்டநேரம் பேசினர். கேத்ரி மகாராஜாவின் காரியதரிசி ஜகன்கோகன்லால் என்பவர் சுவாமிஜியிடம், நீங்கள் இந்து சன்னியாசி. அப்படியிருக்க, எப்படி ஒரு முஸ்லிமின் வீட்டில் தங்கலாம் ? என்றார்.
சுவாமிஜி கோபத்துடன், நீங்கள் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் ? நான் ஒரு துறவி. எல்லாவற்றையும் கடந்தவன் எல்லா உயிர்களிலும் நான் பிரம்மத்தை (தெய்வம்) காண்கிறேன். நான் சுகாதாரத் தொழிலாளியின் அருகிலும் அமர்ந்து சாப்பிடுவேன். இதற்காக கடவுள் என்னை தண்டிப்பார் என்றால், அந்த தண்டனைக்கு கலங்க மாட்டேன். நான் சாஸ்திரத்துக்கும் பயப்பட மாட்டேன். ஏனெனில் எந்த சாஸ்திரமும் மாற்று மதத்தாருடன் பேசுவதையோ, பழகுவதையோ தடுக்கவில்லை. ஆனால், உங்களைப் போன்றவர்களைக் கண்டே பயப்படுகிறேன் உங்களுக்கு கடவுளைப் பற்றியும் தெரியாது; சாஸ்திரங்களும் புரியாது எனக்கு எல்லாமே ஒன்றுதான் உயர்ந்தது தாழ்ந்தது என்பது எந்த ஜீவராசியிலும் கிடையாது, என்றார். இப்படி அழுத்தமாகச் சொன்னதும் அந்நேரத்தில் சுவாமிஜி சிவபெருமானை தன் மனதில் நினைத்ததால் அவரது முகத்தில் தோன்றிய தேஜசும் காரியதரிசியின் மனதை மாற்றிவிட்டன. அவர் சுவாமிஜியிடம், மகராஜ் தாங்கள் எங்கள் மகாராஜாவைக் காண வேண்டும். அரண்மனைக்கு வாருங்கள் என்றார்.