யமுனை நதிக்கரையில் கிருஷ்ணன் பசுக்களை மேய்க்கச் செல்வான். நதிக்கரையைக் கண்டதும் நீராடும் எண்ணம் வந்துவிடும். பசி வந்ததும் கிருஷ்ணனும், அவனது நண்பர்களும் மதிய உணவு சாப்பிட வட்டமாக உட்காருவர். வெண்ணெய், பால், தயிர், பழங்களால் ஆன உணவுகளை இலைகளில் வைத்து உண்ணத் தொடங்குவர். கேலியும், கிண்டலுமாக சிரித்து மகிழும் அவர்களைக் கண்ட வானுலக தேவர்கள், ‘ இவர்கள் என்ன தவம் செய்தார்களோ? இந்த பாக்கியம் எங்களுக்கு கிடைக்கவில்லையே’ என ஏங்குவர். ஆயிரம் இதழ் கொண்ட தாமரை போல கிருஷ்ணனும், நண்பர்களும் அமர்ந்திருக்கும் காட்சி இருக்கும். திருப்பாவையில்,“கறவை பின் சென்று கானம் (உணவு) சேர்ந்துண்போம்” என்று இக்காட்சியை வர்ணிக்கிறாள் ஆண்டாள்.