திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரரை வழிபட வந்த சோழ மன்னன் ஒருவன் காவிரியாற்றில் நீராடினான். அவன் கழுத்தில் கிடந்த முத்து மாலை ஆற்றில் அடித்துச் சென்றது. வருத்தம் ஏற்பட்டாலும், ‘சிவார்ப்பணம்’ என்று சொல்லி கோவிலுக்குள் நுழைந்தான். அப்போது கருவறையில் சுவாமிக்கு, காவிரி தீர்த்தத்தால் அபிஷேகம் நடந்தது. யாரும் எதிர்பாராத நிலையில், தீர்த்த குடத்தில் கிடந்த முத்து மாலை சுவாமியின் கழுத்தில் விழுந்தது. இதைக் கண்ட மன்னனுக்கு ஆனந்த கண்ணீர் பெருகியது. நன்றிக்கடனாக புதிய கோபுரம் ஒன்றை கட்ட உத்தரவிட்டான். இந்த கோபுரத்திற்கு ‘ஆரம் விட்டான் கோபுரம்’ என்று பெயர். ‘ஆரம்’ என்பதற்கு ‘முத்துமாலை’ என்பது பொருள்.