சகுந்தலையின் வளர்ப்புத்தந்தையான கண்வ மகரிஷி ஒரு சமயம் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதி தேவதைகளை சந்திக்க நேர்ந்தது. அழகை இழந்த அவர்கள் அவலட்சணமாக காட்சியளித்தனர். காரணம் கேட்ட போது, ‘‘நதிகளாகிய எங்களிடம் நீராடியவர்களின் பாவச்சுமையால் இந்நிலைக்கு ஆளானோம்’’ என வருந்தினர். அவர்களைத் தேற்றிய மகரிஷி, “வருந்தாதீர்கள். புனித தலமான மயிலாடுதுறையில் பாயும் காவிரியில் நீராடுங்கள். பொன் போல பொலிவு பெறுவீர்கள்’’ என வழிகாட்டினார். அதன்படி நதிகளும் ஒரு ஐப்பசி மாதத்தில் நீராடி நற்பலன் அடைந்தனர். இதனடிப்படையில் ஐப்பசியில் காவிரியில் நீராடுவோரின் பாவம் தீரும். மாசு மருவற்ற பொன் போல திகழ்வதால் காவிரிநதிக்கு ‘பொன்னி’ என்றும் பெயருண்டு.