காஞ்சி மஹாபெரியவர் முன் கைகட்டி நின்றார் அந்த பக்தர். வயது எண்பது இருக்கும். சுவாமிகள் என்ன விஷயம் என்பது போல ஏறிட்டுப் பார்த்தார். ‘கோர்ட்டில் வழக்கு நடக்கிறது. தீர்ப்பு எனக்கு சாதகமாக இருக்க வேண்டும். உங்கள் ஆசி தேவை’ எனக் கேட்டார். ‘நான் ஜட்ஜ் இல்லை, சந்நியாசி’ என்றார் சுவாமிகள். அவர் நகராமல் அங்கேயே நின்றார். ‘தர்மம் ஜெயிக்க வேண்டும் என்றுதான் சந்நியாசிகள் அம்பாளிடம் பிரார்த்தனை செய்ய முடியும்’ என்றார். ‘இல்லை, கேஸ் ரொம்ப நாளாக நடக்கிறது. எனக்கு சாதகமாகத் தீர்ப்பு வந்தால் சொத்தைக் காப்பாற்றிக் கொள்வேன்’ என்றார். ‘‘காப்பாற்றி என்ன செய்யப் போகிறீர்? போகும் போது சொத்து உம்மோடு வரப் போகிறதா?’’ எனக் கேட்டார் பதில் பேசாமல் மவுனமாக நின்றார் பக்தர். ‘‘யாருக்கு எதிராக கேஸ் போட்டிருக்கிறீர்? உம் மருமகளுக்கு எதிராக, மருமகள் என்பவள் மகள் ஸ்தானம் இல்லையா? அவளே உம் மகளாக இருந்தால் கேஸ் போடுவீரா? யோசித்துப் பாரும்’’ தம்மைப் பற்றி தெரிந்திருப்பதை அறிந்து பக்தர் திகைப்பில் ஆழ்ந்தார். ‘‘உம் பையன் விபத்தில் போனதற்கு அவனது விதியே காரணம். மருமகளின் ஜாதகம் தான் காரணம் என கற்பனை செய்து கொண்டு அவளிடம் விரோதம் காட்டுவது நியாயமா...அவளுக்குச் சேர வேண்டிய சொத்தைப் பிரித்துக் கொடுத்தால்தானே அவளும் வாழ்க்கை நடத்த முடியும்? சொத்து தர மாட்டேன் என்று கணவனை இழந்த பெண்ணை கோர்ட்டுக்கு இழுப்பது நியாயமா? கொஞ்சமாவது மனிதாபிமானம் வேண்டாமா? மருமகளுக்கு உரிய பங்கைக் கொடுங்கள், அவளை மகளாகக் கருதி நடப்பதுதான் உமக்கு நல்லது’’ என்றார். கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்த பக்தர் அப்படியே செய்வதாக தெரிவித்தார். விஷயம் அறிந்த மருமகள் மனம் நெகிழ்ந்தாள். மூன்று மாதங்களில் அவரது மனைவி காலமானார். தனி மரமாய் நின்றவரிடம், ‘‘நீங்கள் என் அப்பா ஸ்தானம். உங்களைக் கவனித்துக் கொள்வது என் கடமை’’ என்று சொல்லி ஆதரவோடு கவனித்துக் கொண்டாள். ‘‘மருமகளை மகளாகக் கருதி நடத்தினால் உமக்கு நல்லது` என காஞ்சி மஹாபெரியவர் சொன்னதன் அர்த்தம் இப்போதுதான் புரிந்தது.