திருச்சி: பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கத்தில் திருஅத்யயன உற்வசவம் எனப்படும் வைகுந்த ஏகாதசி உற்சவம் மொத்தம் 21 நாட்கள் கொண்டாடப்படும்.
இதில் பகல் பத்து (திருமொழித் திருநாள்) பத்து நாட்களும், வைகுந்த ஏகாதசிக்கு பின்வரும் 11 நாட்களும் (இயற்பா சாற்றுமுறையுடன்) முடிவடையும். இந்த ப்லவ வருடம் கார்த்திகை மாதத்திலேயே 03.12.2021 அன்று தொடங்கப்பட உள்ளது. பொதுவாக மார்கழி மாதத்தில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி மகோத்சவம் இந்த வருடம் கார்த்திகையில் தொடங்கப்பட உள்ளதைப் பற்றிய சிறு குறிப்பு : இதில் இரண்டு விஷயம் முக்கியமானது.
1 மார்கழி மாதம் சுக்ல பட்ச ஏகாதசி தான் வைகுந்த ஏகாதசி என்றழைக்கப்படுகிறது.
2. தை மாதம் பௌர்ணமி அன்றைக்கு தைத் தேர் என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒன்று.
பிரம்ம தேவர் இஷ்வாகு குல மன்னரிடம் ப்ராணவாகார ரங்கவிமானத்தை கொடுக்கும் போதே பங்குனி சேர்த்தி உற்சவம் தடைபெறாமல் நடைபெற வேண்டும். என்று ஆணையிட்டார்.
அந்த வம்சாவளியில் வந்த ஸ்ரீராமரும் தான் பூஜித்த வந்த தன் குலதெய்வமான அரங்கநாதருடன் கூடிய ப்ராணவாகார விமானத்தை விபிஷணனிடம் கொடுக்கும் போது இதை யேத் தான் அறிவுறுத்தினார். தை மாதத்தில் வரும் பௌர்ணமியில் தைத்தேர் உற்சவத்தை சிறப்பாக நடத்திட விஐயநகர மன்னர் வீரபூபதி உடையார் தன் பிறந்த நட்சத்திரமான தை புனர்பூசம் அன்று தைத்தேர் உற்சவம் நடந்திட பெருமாளை பிரார்த்திக்க, பெருமாளும் திருஅத்யயன உற்சவம் நடந்து முடிந்த பின் தைப் பௌர்ணமியில் பூபதி திருநாளை (தைத்தேர்) உற்சவத்தை வைத்திட அருள் புரிந்தார். அதனால் அதை அடிப்படையாக கொண்டு தான் வைகுந்த ஏகாதசி திருவிழா நிர்ணயிக்கப்படுகிறது. அதனால் இந்த திருஅத்யயன உற்ச்சவ 21 நாட்களும், தைத்தேரும் சரியான நேரத்தில் நடைபெற வேண்டி இந்த வருடம் வைகுந்த ஏகாதசி விழா கார்த்திகை மாதத்திலேயே நடைபெற உள்ளது.
வைகுந்த ஏகாதசி விழாவை மார்கழி மாத சுக்ல பட்ச ஏகாதசியில் ஆரம்பித்தால், தைத்தேர் மற்றும் மாசி மாத உற்சவ நாட்களும் தள்ளிப் போகும். மார்கழி மாத சுக்ல பட்ச ஏகாதசி மிகவும் பின்னால் சென்றால், அதை முன்கூட்டியே வைத்து விடுவார்கள். இந்த ப்லவ வருடம் (2021) மார்கழி மாதம் சுக்ல பட்ச ஏகாதசி திதியில் ஏகாதசி அமையவில்லை. மார்கழி மாதம் கடைசி நாளன்று வருகிறது சுக்ல பட்ச ஏகாதசி. பொதுவாக ஏகாதசி விரதம் இரவு தான் அனுஷ்டிக்கபடும். ஆனால் இந்த வருடம் மார்கழி மாதம் 30ம் தேதி சாயங்காலம் 7.00 மணிக்கே துவாதசி திதி வந்துவிடுகிறது. திருஅத்யயன உற்சவம் ஸ்ரீரங்கத்தில் பகல்பத்து, இராப்பத்து என்று விமர்சியாக 21 நாட்கள் எதுவும் தப்பாமல் கொண்டாடப்பட வேண்டும்.. மார்கழி மாத சுக்ல பட்ச ஏகாதசியில் ஆரம்பித்தால், இந்த உற்சவம் முடிந்து பின்னர் தை மாதம் பௌர்ணமியில் தைத்தேர் உற்சவம் நடைபெற இயலாது. இதன் அடிப்படையில் இந்த வருடம் கார்த்திகை மாதம் சுக்ல பட்ச ஏகாதசியை அடிப்படையாக வைத்து 03.12.2021 அன்று முதல் திருநெடுந்தாண்டகம் ஆரம்பித்து திருவரங்க திருஅத்யயன உற்சவம் விழா நடைபெற உள்ளது.