பழநியில் கந்தசஷ்டி விழா : பக்தர்களுக்கு அனுமதி இல்லை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03நவ 2021 11:11
பழநி: பழநியில் நாளை (நவ.4ல்) தீபாவளி அன்று துவங்கும் கந்த சஷ்டி விழா விற்கு பக்தர்கள் அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
பழநி மலைக்கோயிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா நடைபெறும். கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவிழா உற்சவம் நிகழ்வுகளில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கந்தசஷ்டி விழாவின் முதல் நாளான நாளை(நவ.4ல்) மலைக்கோயிலில் உச்சிகால பூஜையில் காப்புக் கட்டும் நிகழ்வு நடைபெறும். அதன்பின் வழக்கம் போல் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
நவ.5 முதல் நவ.11 வரை தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் சுவாமி புறப்பாடு நடைபெறும். மண்டகப்படிக்கு பக்தர்கள் அனுமதி இல்லை. மண்டகப்படிகள் அனைத்தும் கோயில் நிர்வாகத்தால் நடத்தப்படும். பழநி மலைக்கோயில் கிரி வீதியில் சூரசம்ஹாரம் நடைபெறும் நாளான நவ.9 அன்று, பகல் 11.00 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். அதன்பின் பகல் 12.00 மணிக்கு உச்சிகால பூஜை, பகல் 1:30 மணிக்கு சாயரட்சை பூஜை, பகல் 2:45 மணிக்கு மேல் மலை கோயிலில் வேல் வாங்குதல் நடைபெறும். அதன்பின் சன்னதி திருகாப்பிடப்படும். மலைக்கோவிலில் இருந்து சின்னகுமாரசாமி புறப்பட்டு கிரிவீதி வந்தடைவார். பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமார சாமி மங்கம்மாள் மண்டபம் வந்தடைவார். மாலை 6:00 மணிக்கு மேல் நான்கு கிரிவீதிகளிலும் சூரசம்ஹார நிகழ்வு நடைபெறும். இரவு 9:00 மேல் கோயில் சார்பாக வெற்றி விழா நடைபெறும். மலைக்கோயிலில் சம்ப்ரோக்ஷணம் செய்யப்பட்டு ராக்கால பூஜை நடைபெறும்.
திருக்கல்யாணம் : நவ.,10 அன்று பகல் 12:30 வரை பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை. காலை 9.0 மணிக்கு மேல் 10 மணிவரை மலைக்கோயிலில் வள்ளி தேவசேனா சமேத சண்முகர் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். பகல் 12:30 பின் வழக்கம்போல் மலைக் கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். பெரியநாயகியம்மன் கோயிலில் மாலை4:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்க படுவர். மாலை 6.30 மணிக்கு மேல் 7:30 மணிக்குள் பெரியநாயகியம்மன் கோயிலில் வள்ளி தேவசேனா முத்துக்குமாரசாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். உற்சவத்தில் அர்ச்சகர்கள் பணியாளர்கள் மட்டும் கலந்து கொள்வர். பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதி இல்லை. மேலும் சூரசம்கார நிகழ்வும், திருக்கல்யாண நிலையும் யூடியூப் சேனல் மற்றும் வலைதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய திருக்கோவில் நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பக்தர்கள் அனைவரும் சமூக இடைவெளி கடைப்பிடித்தும் திருக்கோயில் சுவாமி தரிசனம் செய்ய திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் அறிவித்துள்ளார்.